எங்களுக்கு சிக்கலை உருவாக்கப் பார்க்கிறார்: ஜேர்மன் சேன்ஸலர் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு உதவுவது தொடர்பில் ஜேர்மன் சேன்ஸலரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சர்வதேச அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஏவுகணைகள் அணுப்புவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி
ரஷ்யா துவக்கிய போரை எதிர்கொண்டுள்ள உக்ரைன், ஜேர்மனியிடம், Taurus long-range cruise missiles என்னும் ஏவுகணைகளைத் தங்களுக்குத் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால், அதைக் கொடுக்க ஜேர்மனி தயக்கம் காட்டிவருகிறது. தாங்கள் உக்ரைனுக்கு அந்த ஏவுகணைகளைக் கொடுத்தால், அது நேரடியாக ரஷ்யாவுடன் மோதுவதுபோல் ஆகிவிடும் என ஜேர்மனி கருதுகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு Taurus ஏவுகணைகள் வழங்குவது தொடர்பில் ஜேர்மன் சேன்ஸலரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் சர்வதேச அளவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஜேர்மன் சேன்ஸலர் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு Taurus ஏவுகணைகள் வழங்குவீர்களா என்று கேட்டால், அதற்கு பதிலளித்த ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸோ, எங்களால் ஏவுகணைகளைக் கொடுக்க இயலாது என நேரடியாக பதில் சொல்லுவதை விட்டுவிட்டு, பிரித்தானியாவும் பிரான்சும் உக்ரைனுக்கு உதவுவதுபோல எங்களால் உக்ரைனுக்கு உதவமுடியாது என்று பதிலளித்துள்ளார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாற்போல, ஏற்கனவே பிரித்தானியா மீது எரிச்சலில் இருக்கும் புடினுடைய கோபத்தை, ஜேர்மன் சேன்ஸலரின் கருத்து மேலும் அதிகரிக்கக்கூடுமென பிரித்தானிய தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டியின் முன்னாள் தலைவரான Tobias Ellwood கூறுகையில், ஜேர்மன் சேன்சலரின் கருத்து, உளவுத்துறை ரகசியங்களை தவறாக பயன்படுத்துவதாக உள்ளதுடன், ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு தயக்கம் காட்டி வருவதிலிருந்து, வேண்டுமென்றே திசை திருப்பும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எரிச்சலில் இருக்கும் ரஷ்யா, பிரித்தானியா மீதான தன் கோபத்தை அதிகரிக்க ஜேர்மன் சேன்ஸலரின் கருத்தை பயன்படுத்திக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.