பார்க்க கார் போலவே இருக்கும், ஆனால்… புனேவில் தயாராகும் விசித்திரமான எலக்ட்ரிக் வாகனம்!!

ஜென்சோல் குழுமம் (Gensol Group)-இன் சார்பில் 3-சக்கர எலக்ட்ரிக் கார் ஒன்று இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் ஜென்சோல் க்ரூப், எலக்ட்ரிக் கார் வணிகத்திலும் இறங்க தயாராகி வருகிறது. குறிப்பாக, நகர்புற சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமான மொபைலிட்டி தீர்வுகளை கொண்டுவருவதில் ஜென்சோல் ஆர்வமாக உள்ளது.

இதன் காரணமாகவே, போக்குவரத்து நெரிசலிலும் எளிதாக புகுந்து செல்லக்கூடிய 3-சக்கர வாகனத்தில் ஜென்சோல் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. மேலும், இந்த 3-சக்கர வாகனத்தை எலக்ட்ரிக்கில் கொண்டுவரவும் ஜென்சோல் திட்டமிட்டுள்ளது. ஜென்சோலின் இந்த எலக்ட்ரிக் வாகனம் தொடர்பான டீசர் கடந்த டிசம்பர் மாதத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த ஜென்சோல் 3-சக்கர எலக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் பொது சாலை ஒன்றில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் புனேவின் சாகான் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ உள்பட நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு சாகானில் தான் தொழிற்சாலை உள்ளது.

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஜென்சோல் நிறுவனத்துக்கும் சாகானில் தொழிற்சாலை உள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் தலைமையகமும் புனேவில்தான் அமைந்துள்ளது. புனேவில் உள்ள ஜென்சோல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் வருடத்திற்கு 30,000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது. ஜென்சோலின் புதிய 3-சக்கர எலக்ட்ரிக் வாகனத்தின் சோதனை ஓட்டம் தொழிற்சாலைக்கு அருகேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மார்க்கெட் இப்போதுதான் மெல்ல மெல்ல விரிவடைந்து வருகிறது. ஆனால், எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களுக்கு முற்றிலுமாக மார்க்கெட் இல்லை என்றுதான். ஏனெனில், எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் பெரியதாக எதுவும் இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் இல்லை. 3 சக்கர வாகனங்களை நம் அனைவரும் பார்த்திருக்கிறோம். ஆட்டோக்கள் மற்றும் ரிக்‌ஷாக்கள் உள்ளிட்டவை 3 சக்கர வாகனங்களே.

ஆனால், ஜென்சோலின் எலக்ட்ரிக்கின் 3 சக்கர வாகனம் ஆனது சற்று வித்தியாசமானதாக உள்ளது. ஏனெனில், இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் இரு சக்கரங்களும், பின்பக்கத்தில் ஒரு சக்கரமும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த வாகனத்தில் பெரிய, ஆற்றல்மிக்க பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவே. 150கிமீ – 200கிமீ என்ற அளவில் ரேஞ்சை வழங்கக்கூடிய பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டு இருக்கலாம்.

முன் சக்கரங்களுக்கு ஆற்றலை வழங்கும் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டாரில் இந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் இயங்கக்கூடியதாக ஜென்சோலின் இந்த எலக்ட்ரிக் வாகனம் இருக்கும் என கூறப்படுகிறது. 3 சக்கரங்களை மட்டுமே கொண்டு இருப்பினும், வாகனத்திற்கு உள்ளே 4 பேர் அமர்ந்து செல்லலாம் என்றும், அதேநேரம் பூட் ஸ்பேஸும் விசாலமானதாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *