கடவுள் ராமர் கோயில் இன்னும் திறக்கப்படவே இல்லை, அதற்குள் இப்படியா!! விமானத்தினுள் பக்தர்கள் செய்த காரியம்!
இண்டிகோ (IndiGo) விமானம் ஒன்றில் பயணிகள் கடவுள் ராமர் பாடலை பாடியப்படி பயணம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த விமானத்தினுள் இருந்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், நடுவானில் ராமர் பாடலை பாடியதற்கான காரணத்தையும் பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் வருகிற ஜன.22ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடவுள் ராமருக்காக பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ள கோவில் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ராமரின் கரகோஷங்கள் எழ ஆரம்பித்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடவுள் ராமர் பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதற்காகவே, அயோத்தியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது மற்றும் அயோத்தி இரயில் நிலையம் பெரிய செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், அயோத்திக்கு இரயிலில் தான் அதிக பக்தர்கள் வருவார்கள் என்றாலும், நாடு முழுவதும் விமான சேவை விரிவடைந்துள்ளதால் விமானத்திலும் நிறைய பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால், விமானத்தில் அயோத்திக்கு பக்தர்கள் வருகை தர ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர். அவ்வாறு, அயோத்திக்கு இண்டிகோ விமானத்தில் வந்த பக்தர்கள் விமானத்தினுள் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அயோத்தியை நோக்கி செல்லும் பக்தர்கள் பிரபலமான ‘ராம் ஆயேங்கே’ பாடலை ஒன்றாக இணைந்து பாடுவதை கேட்க முடிகிறது.
சிலர் ராம் ஆயேங்கே பாடலை பாட, சிலர் அதற்கேற்ப கைகளை தட்டி பரவசம் அடைந்தனர். இதனால், கொஞ்ச நேரத்தில் விமான கேபின் முழுவதுமே பக்தி மயம் பரவியது. அதேநேரம், நிறைய பேர் தங்களது மொபைல் போனில் அந்த காட்சியை பதிவு செய்தனர். பயணிகள் மட்டுமின்றி, விமான பணிக்குழுவினரும் இந்த பக்தி பரவசத்தில் திளைத்தப்படி நிற்பதை வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ பகிரப்பட்ட mygovindia இன்ஸ்டாகிராம் பதிவில், “‘ராம் ஆயேங்கே’ உண்மையில் காற்றில் எதிரொலிக்கிறது! அயோத்திக்கு செல்லும் விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் ஒரே குரலில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அயோத்தியில் உள்ள ராமர் மந்திரில் உள்ள ராமரின் பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு டோனை அமைப்பது உண்மையிலேயே உற்சாகமான அனுபவம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இணையத்தில் வேகமாக வைரலாகிவரும் இந்த வீடியோவை இப்போதுவரையில் மட்டும் 1.4 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இந்த அளவிற்கு கடவுள் ராமரின் பக்தர்களை பரவசப்படுத்தி உள்ள ராம் ஆயேங்கே பாடலை உண்மையில் பாடியவர் ஜெர்மனியை சேர்ந்த பெண் பாடகர் கசண்ட்ரா மே ஸ்பிட்மன் ஆவார். இந்திய அரசாங்கத்தால் இன்ஸ்டாவில் பகிரப்பட்ட மேலேயுள்ள வீடியோவை கசண்ட்ராவும் பார்த்து, தனது ஆச்சிரியத்தை வெளிப்படுத்தி உள்ளார்.