பகவான் ராமர் பகுஜன்களின் அரசர்… அசைவ உணவு உண்பவர்- என்.சி.பி. எம்.எல்.ஏ. ஜிதேந்திரா அவாத்
பகவான் ராமர் முதல் மஹா விகாஸ் அகாடி (MVA) அரசாங்கம் வரை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) இரு குழுக்களும் புதன்கிழமை மாறிமாறி குற்றம்சாட்டி முட்டிக் கொண்டனர்.
எதிர்க்கட்சியான என்.சி.பி. எம்.எல்.ஏ. ஜிதேந்திரா அவாத் ஷீரடியில் நடந்த கட்சியின் ஆய்வு முகாமில் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும் போது, “பகவான் ராமர் பகுஜன்களின் ராஜா மற்றும் அசைவ உணவு உண்பவர்” என்று கூறி சலசலப்பைத் தொடங்கினார்.
“நாங்கள் வரலாற்றைப் படித்துவிட்டு அரசியலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. ராமர் நம்முடையவர். எங்களில் பகுஜன்கள் உண்பதற்காக வேட்டையாடுபவர்கள்… ராமர் ஒருபோதும் சைவ உணவு உண்பவர் அல்ல. அவர் அசைவம் சாப்பிடுபவர். 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்தவர் எப்படி சைவ உணவு உண்பவராக இருக்க முடியும்” என்று அவர் கேட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் ஜனவரி 22-ஆம் தேதியை உலர் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், அசைவ உணவுகளுக்கு ஒரு நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளும் பாஜக எம்எல்ஏ ராம் கதம் கடிதம் எழுதிய நேரம், அவாத்தின் அறிக்கை வந்தது.
கோடான கோடி ராமர் பக்தர்களின் உணர்வுகளை அவமதித்தவர் என்று கூறி, பாஜக அவாத்தை உடனே குறிவைத்தது.
”ராமர் அசைவ உணவு சாப்பிட்டார் என்பதற்கு ஜிதேந்திரா அவாத் என்ன ஆதாரம் வைத்துள்ளார்? அவர் அதைப் பார்த்தாரா? கோவில் திறக்கப்படும் நேரத்தில், அவர் ராமரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்ச்சிகளை அவமதித்துள்ளார், ”என்று கதம் கூறினார்.
ஆளும் என்சிபியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே, “அவர் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை, அதைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது” என்று அவாத்தை கேலி செய்தார்.