சென்னை-க்கு மாஸ்டர் பிளான் போடும் L&T.. ஓரே இடத்தில் 2 பெரிய ஐடி நிறுவனங்கள்..!!
இந்தியாவின் ஐடி நகரம் யார் என்ற போட்டி பெங்களூர் மற்றும் ஹைதராபாத்-க்கு மத்தியில் உருவாக்கியிருக்கும், இதேவேளையில் தமிழ்நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதோடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அடுத்தடுத்து அலுவலகத்தைத் திறந்து வருகிறது.
தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 2ஆம், 3ஆம் தர நகரங்களில் அதிகப்படியான டெக் ஸ்டார்ட்அப் மற்றும் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் தனது இந்திய கிளை நிறுவனங்களைத் திறந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனமான எல் அண்டு டி சென்னை, கோவை என மாநிலத்தின் பல பகுதிகளில் முக்கியமான கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சொல்லப்போனால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் எல் அண்டு டி நிறுவனம் பங்கு வகிக்கிறது.
இப்படி எல் அண்டு டி சென்னையில் போரூர் பகுதியில் கட்டி வரும் மாபெரும் L&T Innovation Campus-ன் முதல் கட்ட திட்டம் கிட்டதட்ட முடியும் நிலையை எட்டியுள்ளது. இந்நிறுவனம் முதல் கட்ட திட்டத்தில் 2 பெரிய டவர்களைக் கட்ட முடிவு செய்திருந்தது, இந்த இரு கட்டிடமும் அலுவலகப் பகுதியாகும்.
சுமார் 12 லட்சம் சதுரடி கொண்ட 2 L&T Innovation Campus டவர்களில் விரைவில் LTI Mindtree மற்றும் L&T Technology Services ஆகியவை தனது பிரம்மாண்ட அலுவலகத்தைத் திறக்க உள்ளது. இரு நிறுவனங்களும் ஐடி மற்றும் டெக் சேவையில் ஈடுப்பட்டு வருபவை. இந்தப் பிரம்மாண்ட கட்டிடத்தின் தற்போதைய புகைப்படம் வெளியாகி டிரெண்டாகியுள்ளது.
L&T குழுமத்தில் 2 டெக் பிரிவுகள் உள்ளது 1. L&T டெக்னாலஜி நிறுவனம் இது இன்ஜினியரிங் பிரிவுக்கான டெக் சேவைகளை அளிக்கிறது. அதாவது இன்ஜினியரிங், உற்பத்தி, சப்ளை செயின் எனப் பல துறைக்கு டிசைன், டெக் சேவைகளை வழங்கி வருகிறது.
இரண்டாவது நிறுவனம் L&T இன்பர்மேஷன் டெக் நிறுவனம், இது ஐடி மற்றும் கன்சல்டிங் பிரிவில் இயங்கி வந்தது, 2019ல் Mindtree நிர்வாகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்து 2022ல் மொத்தமாகக் கைப்பற்றப்பட்டுத் தற்போது LTIMindtree ஆக இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டிலேயே வேகமாக வளரும் மாவட்டமாக விளங்கும் கோயம்புத்தூரில் LTI Mindtree நிறுவனம் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய 2023 நவம்பர் மாதம் முடிவு செய்தது.
இதோடு ஏற்கனவே 200 ஊழியர்கள் கோயம்புத்தூர் LTI Mindtree நிறுவனத்தில் பணியாற்றி வரும் வேளையில் இப்புதிய விரிவாக்கத்தின் கீழ் LTI Mindtree சுமார் 800 ஊழியர்களைப் புதிதாகச் சேர்க்க உள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் LTI Mindtree நிறுவன ஊழியர்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர உள்ளது.