தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
10 ஆண்டு காலத்துக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆட்சி முடியப் போகும் நிலையில் மாநிலம் மாநிலமாகச் சென்று திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி.
அவரது அவசரகாலப் பதற்றமானது அவர் முகத்தில் இருக்கும் பயத்தைக் காட்டுகிறது. மீண்டும் மோடி என்று அவரது ஆதரவாளர்கள் எவ்வளவு கூச்சல் எழுப்பினாலும், வேண்டாம் மோடி என்ற முழக்கமே இந்தியா முழுமைக்கும் தற்போது எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற அரசியல் நோக்கம் இண்டியா கூட்டணிக் கட்சிகளால் மக்கள் மனதில் விதைக்கப்பட்டு விட்டது. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
சில மாநிலங்களில் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று, தொகுதிப் பங்கீடுகள் செய்யப்பட்டும் விட்டன. சில மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களில் அவையும் நல்ல படியாக நடைபெறும் எனத் தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகச்சிறப்பாக முடிவுற்றது என்பதை மனமகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். எண்ணிக்கை அல்ல, எண்ணம்தான் முக்கியம் என்பதை உணர்ந்தவர்கள் நம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள். பாசிச பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்ட தலைவர்கள் இவர்கள்.
இந்த ஒற்றுமை உணர்வு தான் 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் அனைத்து வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது. 2019 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகிய அனைத்தையும் இக்கூட்டணி மூலமாகத்தான் வென்று காட்டினோம்.
ஒன்றுபட்ட இலக்கும், ஒற்றுமைச் சிந்தனையும் கொண்டவர்களாக நம் கூட்டணி இயக்கத் தலைவர்களும், முன்னணியினரும், தொண்டர்களும் இருப்பதால்தான் இத்தகைய தொடர் வெற்றியை நாம் பெற்றோம். தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் என்பதை மாற்றி, இலக்கு ஒன்றாக இருந்தால் கூட்டணியும் மாறாது என்பதையும் நாம் நிரூபித்து வருகிறோம்.
தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு கட்சியின் உடன்பிறப்புகள் அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுவை உள்ளிட்ட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும், வேட்பாளர் மு.க. ஸ்டாலின்’ என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும்.
அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி அனைத்து உடன் பிறப்புகளும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால் தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது மத்திய அரசில் நடக்கும்.
மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால் நாம் இங்கு நாற்பதுக்கு நாற்பது வென்றாக வேண்டும். வெற்றி ஒன்றே உங்களது நோக்கமாக இருக்கட்டும். இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சி அமைய வேண்டிய அரசியல் தேவையை உணர்த்துங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.