தென் கொரியா சாலையில் மேட்-இன்-இந்தியா கார்!! கியா இப்படியொரு காரை உருவாக்குகிறதா?

கியா க்ளாவிஸ் (Kia Clavis) எஸ்யூவி கார் ஒன்று முதல்முறையாக தென் கொரியாவில் சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. சில பகுதிகள் மறைக்கப்பட்ட நிலையில், க்ளாவிஸ் கார் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த படங்களின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று கியா ஆகும். இந்திய மார்க்கெட்டில் 2019இல் நுழைந்த கியா அதன்பின் பல்வேறு தரமான கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் கார்களை அறிமுகப்படுத்தும் அதேநேரம், மற்ற வெளிநாடுகளிலும் புது, புது கார்களை களமிறக்க கியா தயாராகி வருகிறது.

குறிப்பாக, தாயக நாடான தென்கொரியாவில் க்ளாவிஸ் என்கிற பெயரில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை கியா களமிறக்க உள்ளது. இந்த நிலையில், கியா க்ளாவிஸ் காம்பெக்ட் எஸ்யூவி கார் தென் கொரியாவில் முதல்முறையாக சோதனை ஓட்டத்தின் போது அடையாளம் காணப்பட்டு உள்ளது. க்ளாவிஸ் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவில் விற்பனைக்கு வந்தால், கியா செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களுக்கு மத்தியில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார் நிறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்சமயம் கியா ஏஐ என அழைக்கப்பட்டு வரும் க்ளாவிஸ் கார் சைடில் தள்ளி மூடி/ திறக்கக்கூடிய வகையிலான கதவுகளை பெற்றுவர உள்ளதை தற்போது நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலம் அறிய முடிகிறது.

இதை விட, இந்த ஸ்பை படங்களின் மூலமாக நமக்கு முக்கியமான ஒரு விஷயம் தெரிய வருகிறது. அதாவது, இந்த படங்களில் க்ளாவிஸ் காரில் எம்.ஆர்.எஃப் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. அப்படியென்றால், இந்த க்ளாவிஸ் கார் இந்தியாவில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கிளாவிஸ் காரின் முன்பக்கத்தில் செங்குத்தான வடிவில் ஹெட்லைட்களை கியா பொருத்தி உள்ளது.

இந்த ஹெட்லைட் செட்-அப் ஆனது 3 பிரிவுகளாக உள்ளது. இந்த காரின் பின்பக்கத்திலும் செங்குத்தான வடிவில் டெயில்லைட்கள் வழங்கப்பட்டு இருக்க, டெயில்லைட்கள் இரண்டும் லைட் பார் ஒன்றின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய செட்-அப்பை கியா இவி9 எலக்ட்ரிக் காரில் காண முடியும். ஸ்பை படங்களில், காரின் பெரும்பான்மையான பாகங்களை காண முடியவில்லை, அவை மறைப்பால் மறைக்கப்பட்டு உள்ளன.

எப்படியிருந்தாலும், தென்கொரியாவில் அறிமுகம் செய்யும் அதே தோற்றத்திலான க்ளாவிஸ் காரை இந்தியாவில் கியா அறிமுகம் செய்யாது. நிச்சயமாக, தோற்றத்தில் சில மாற்றங்களை செய்யும். நமக்கு கிடைத்துள்ள படங்களில் காரின் உட்பக்கமும் மறைக்கப்பட்டு உள்ளது என்றாலும், இருக்கைகள் மறைக்கப்படவில்லை. இதன் மூலமாக, க்ளாவிஸ் கார் கூல்டு இருக்கைகளை பெற்றுவரவுள்ளதை அறிய முடிகிறது.

அத்துடன், 360-டிகிரி கேமரா செட்அப், பனோராமிக் சன்ரூஃப், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்பட மற்ற சவுகரிய அம்சங்களும் இந்த புதிய கியா எஸ்யூவி காரில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 6 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. க்ளாவிஸின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் அடாஸ் வழங்கப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *