தமுக்கம் மைதானத்தில் நாளை முதல் ‘மேட் இன் மதுரை’ கண்காட்சி
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜன. 19 முதல் ‘மேட் இன் மதுரை’ கண்காட்சி நடைபெற உள்ளது.
மதுரையின் தொழில் வளத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்தவும், தொழில் முனைவோர்களுக்கு தங்களுடைய தொழிலை விரிவுப் படுத்த உதவுவதற்கும் 2001, 2003, 2013, 2016, 2022-ம் ஆண்டுகளில் ‘மேட் இன் மதுரை’ கண்காட்சி நடத்தப்பட்டது.
தற்போது 6-வது முறையாக ஜன. 19 முதல் 21-ம் தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் ‘மேட் இன் மதுரை’ கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியை மடீட்சியா, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் வணிகத் துறை, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம் பாட்டு மையம், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. டிவிஎஸ், ஹைடெக் அராய் நிறுவனம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் நடைபெறும் இக்கண்காட்சியில் 125 அரங்குகள் அமைக்கப் படுகின்றன.
இதில் டெக்ஸ்டைல், பிளாஸ்டிக், இன்ஜினீயரிங், ரப்பர், பால் பொருட்கள், உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள், பர்னிச்சர்ஸ், சமையலறை சாதனங்கள், மருந்து பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இடம் பெறுகின்றன. தினமும் காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம். இத்தகவலை கண்காட்சித் தலைவர் ஆர்.எஸ்.குணமாலை, மடீட்சியா தலைவர் ஆர்.எம் லெட்சுமி நாராயணன் ஆகியோர் தெரிவித்தனர்.