மினி கூவத்தூராக மாறிய மதுரை தல்லாக்குளம்; நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை புறக்கணிக்கும் திமுக உறுப்பினர்கள்
தமிழ்நாட்டின் 6ஆவது பெரிய மாநகராட்சியான நெல்லை மாநகராட்சி மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களான 51 பேரின் ஆதரவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக இருந்து வருகிறார். ஆனால், ஆளுங்கட்சி உறுப்பினர்களே அவர் மீது அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம் 38 உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி மனு அளித்தனர்.
அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கக்கூடாது என்று தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, கவுன்சிலர்களை 3 குழுக்களாக பிரித்து, அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வியாழன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மற்றும் மாவட்டச் செயலாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமையில் திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் விருதுநகர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில், ஆட்சியை காப்பாற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டது பெரும் பேசு பொருளானது. இந்நிலையில் அதே போன்று ஆளுங்கட்சி மேயரை காப்பாற்ற திமுக கவுன்சிலர்கள் வெளியூர் அழைத்துச்செல்லப்பட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், இரவோடு இரவாக நெல்லை திமுக கவுன்சிலர்கள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தல்லாகுளத்தில் உள்ள விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?
கூட்டத்திற்கு ஆணையரே தலைமை தாங்கி அனைத்து முடிவுகளையும் எடுப்பார், அவர் எடுக்கும் முடிவே இறுதியானது. ஆணையர் விருப்பம் இருப்பின் கூட்டம் தொடங்க கூடுதலாக அரை மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
வழக்கமாக மாநகராட்சி கூட்டரங்கில் மேயர், துணை மேயர் மற்றும் ஆணையர் ஆகியோருக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படும். ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் ஆணையருக்கு மட்டுமே இருக்கை ஒதுக்கப்படும். தீர்மானம் முன்மொழியப்படுவதற்கு முன்பு, கவுன்சிலர்களுக்கு அருகே மேயர் மற்றும் துணை மேயருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் படி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த, 5ல் 4 பங்கு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதாவது, மொத்தம் உள்ள 55 உறுப்பினர்களில் 44 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே கூட்டரங்கின் கதவுகள் மூடப்பட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும்.
தீர்மான பொருள் முன்வைக்கப்பட்ட பின்னர், அதிகப்பட்சம் 2 மணி நேரத்திற்குள் விவாதம் நடத்தி முடிக்கப்பட வேண்டும். விவாதம் நிறைவடைந்ததும் குரல் வாக்கெடுப்பு முன்மொழியப்படும். 5ல் 4 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும். நம்பிக்கை இல்லா தீர்மான கூட்ட நிகழ்வுகள் அனைத்தும் மினிட் புத்தகத்தில் பதிவு செய்யப்படும்.
பெரும்பாலான கவுன்சிலர்கள் மறைமுக வாக்கெடுப்பு கோரினால், ஆணையரின் முடிவுக்கு உட்பட்டு வாக்கெடுப்பு நடைமுறை மாற்றி அமைக்கப்படும். தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் பட்சத்தில் மினிட் புத்தகத்துடன் கூடிய அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும். 4 பங்கு உறுப்பினர்களுக்கு குறைவாக பங்கேற்றால், தீர்மானம் முன்மொழியப்படாமல் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டு மினிட் புத்தகத்துடன் அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.