ஒடிசா மகாராணி சென்னையில் காலமானார்..!

ஒடிசாவில் பிஜு ஜனதாதள கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவர் சுக்னானா குமாரி தேவ் (87). கல்லிகோட்டு பகுதியை சேர்ந்த ராஜா ராமசந்திர மர்தராஜ தேவ் என்பவரின் மருமகள் ஆவார்.

ஒடிசாவில் உள்ள மக்களால் மகாராணி என அழைக்கப்படும் அவர் 10 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்திருக்கிறார். இந்நிலையில், வயது முதிர்வால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.44 மணியளவில் காலமானார். சென்னையில் கடந்த 1937-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி பிறந்த அவர், சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்கிறார்.

சமூகத்தில் வறுமை நிலையில் உள்ள பெண்களுக்கு உதவுவதில் சிறப்பு ஆர்வம் கொண்டவர். 1960-ம் ஆண்டு அவருடைய அரசியல் வாழ்வு தொடங்கியது. 1961-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக கல்லிகோட்டு தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.வானார்.

இதன்பின் 1964-ம் ஆண்டு உத்கல் காங்கிரஸ் வேட்பாளராகவும், இதன் பின் ஜனதா கட்சி சார்பில் (1977, 1985, 1990 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில்) போட்டியிட்டு இதே தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார்.

தொடர்ந்து, பிஜு ஜனதா தள வேட்பாளராக இதே தொகுதியில் போட்டியிட்டு 2000 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றார். இதன்பின்னர், கபிசூரியநகர் தொகுதியில் 2009 மற்றும் 2014 ஆண்டுகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரை பார்ப்பதற்காக முதல்வர் நவீன் பட்னாயக் சென்னைக்கு வந்து அவருடைய உடல்நலம் பற்றி விசாரித்து சென்றார். அவருடைய மறைவை அடுத்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *