மகாஸ்கந்த ஹோமம்: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் தோரணமலையில் தைப்பூச விழா! சங்கல்பியுங்கள்!
2024 ஜனவரி-25 ம் தேதி தோரணமலையில் அதிகாலை 5.30 மணிக்கு மகாஸ்கந்த ஹோமம் தொடங்கி, மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.
தென்காசி மாவட்டம் கடையம் பக்கத்தில் அமைந்துள்ளது தோரணமலை. இங்குள்ள முருகப்பெருமான் ஆலயம் நம்பி வருபவர்களுக்கும் நல்லருள் புரியும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. வாரணம் (யானை) போன்ற அமைப்பில் அமைந்துள்ள இந்த மலை வாரணமலை என்றும், பொதிகை மலைகளின் தோரண வாயிலாக அமைந்து உள்ளதால் தோரண மலை என்றும், அகத்தியர் வாழ்ந்து பல மருந்துகளை கண்டறியக் காரணமாக இருந்ததால் காரண மலை என்றும், முருகப்பெருமான் தோன்றி பல சித்தர்களுக்கு ஞானம் அளித்ததால் பூரண மலை என்றும் போற்றப்படுகிறது.
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மருந்துகளின் கிடங்காக விளங்கும் இந்த தோரணமலை சித்தர்களின் தபோவனமாக விளங்கி வருகிறது. அதற்கு காரணமும் உண்டு. சிவ – சக்தி திருமணத்தின் பொருட்டு, தாழ்ந்துபோன தென்னகத்தை சமன் படுத்த இங்கு வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் மகத்துவத்தையும் சாந்நித்யமும் உணர்ந்து இங்கேயே தங்கிவிட்டார். தோரணமலையில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர் முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். இங்கு அகத்தியருக்குக் காட்சி தந்த தோரணமலை முருகப்பெருமான்அகத்தியருக்கு ஆலோசனை அளித்து அந்த இடத்தில் மாபெரும் மருத்துவ கலாசாலையை நிறுவச் செய்து 72 விதமான பாட வகுப்புகளையும் உருவாக்கித் தந்தார் என தலபுராணம் கூறுகின்றது.
மருத்துவப் பிரிவில் மட்டும் அந்த காலத்திலேயே 1 லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்கள் எழுதிய அகத்தியரின் பெருமை அறிந்த பல்வேறு தேசத்தைச் சேர்ந்த மாணவர்களும் தோரணமலை வந்து பாடம் பயின்றனர், பட்டங்கள் பெற்றனர். அகத்தியரோடு அவரது சீடரான தேரையரும் இங்கு தங்கி மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்துகளைக் கண்டறிந்தார் எனப்படுகிறது. 700 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்து மருத்துவ ஆய்வுகளும் சேவைகளும் புரிந்த தேரையர், பின்னர் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். அதன் பிறகும் பல சித்தப் புருஷர்களும் ஞானியரும் இங்குதங்கி தவம் புரிந்து லோக க்ஷேமத்துக்கு நன்மைகள் செய்தார்கள் என்கிறது தலவரலாறு.