மகரசங்கராந்தி பலன் 2024.. தை பொங்கல் முதல் ராஜாதி ராஜயோகம்.. 2025 வரை வீட்டில் குவியும் செல்வம்
சென்னை: சூரிய பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழையும் நாள் மகர சங்கராந்தியாக கொண்டாடப்படுகிறது. மகரசங்கராந்தியின் சஞ்சாரத்தினால் 2024 ஜனவரி 14ஆம்தேதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வரை என்ன பலன்கள் நடைபெறும் என்றும் எந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராஜ யோகமும் வெகுமானமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மகரசங்கராந்தி: ஸ்ரீஸ்வஸ்திஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் மார்கழி மாதம் 29ஆம் தேதி ஜனவரி 14, 2024ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை சுக்லபட்சம், சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம், வரீயான் நாமயோகம் பத்ரை கரணத்தில் சித்த யோகத்துடன் கூடிய சுபயோக சுப தினத்தில் நள்ளிரவு 2.43 மணிக்கு சூர்ய உதயாதி 50.12 நாழிகை அளவில் விருச்சிக லக்னம் சிம்ம நவாம்சையில் சங்கராந்தி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
வளம் தரும் சூரியன்: சூரியன், தனது பயணத்தை தைமாத பிறப்பன்று வடக்கு திசையை நோக்கி தொடங்குகிறார். இதை உத்திராயண புண்ணியகாலம் என்பர். உத்திராயணம் என்றால் வடக்குப்புறமான வழி என்று பொருள். இக்காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். தை மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தை பொங்கல் திருநாள்: ஆண்டுதோறும் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையுள்ள ஆறு மாதங்கள் உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி வரையுள்ள மாதங்கள் தட்சிணாயணம் என்றும் கூறப்படுகிறது. தெற்கு திசையில் பயணித்து வந்த இதில் தை மாதம் முதல் வட திசையில் பயணத்தை தொடங்குவார். இந்த நாளை தமிழகத்தில் தைப் பொங்கல் என்று கொண்டாடுகிறோம். மகர சங்கராந்தி என்று ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொண்டாடுகின்றனர்.
மகரசங்கராந்தி பலன்: மகரசங்கராந்தி தேவதையின் பெயர், தோற்றம், உடை, வாகனம், உணவு, அணிந்திருக்கும் ஆபரணம், புஷ்பம் போன்றவற்றுக்குத் தக்கபடி தேசத்தின் அப்போதைய நன்மை தீமைகளுக்குப் பலன் கூறுவார்கள். இந்த ஆண்டு மகரசங்கராந்தி தேவதை எப்படி எதன் மீதேறி வருகிறார் அதற்கான பலன்கள் எப்படி என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.