தெலுங்கு ஆடியன்ஸை குறி வைக்கும் மலையாள சினிமா…!
தென்னிந்திய சினிமா தேசிய அளவில் ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளது. பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா படங்களின் மூலம் இந்திய அளவில் பெரிய சந்தையை தெலுங்கு சினிமா உருவாக்கியுள்ளது. கேஜிஎஃப், காந்தாரா படங்கள் கன்னட சினிமாவுக்கு அதுபோல் ஒரு சந்தையை ஏற்படுத்தியுள்ளன. மலையாள சினிமாவுக்கு தேசிய அளவில் வணிகம் இல்லை என்றாலும், ஓடிடி தளங்கள் வழியாக பெரிய ரசிகர்வட்டத்தை மலையாளப் படங்கள் சம்பாதித்துள்ளன. இதில் பின்தங்கியிருப்பது தமிழ் சினிமா.
மலையாளத்தில் பிப்ரவரி 9, பிரேமலு என்ற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் உலகம் முழுவதும் 50 கோடிகளைத் தாண்டி வசூலித்து, 2024 ல் வெளியான மலையாளப் படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்தப் படத்தை நடிகர் பகத் பாசில், இயக்குநர் திலீஸ் போத்தன், திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
இதையடுத்து, பிப்ரவரி 15 வெளியான மம்முட்டியின் பிரமயுகம் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுக்களுடன் வசூலை குவித்து வருகிறது. இந்தப் படமும் இந்திய அளவில் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. குறிப்பாக தெலுங்கு திரைப்பட ஆர்வலர்கள் சமீபமாக மலையாள சினிமா மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வரும் 23 ம் தேதி பிரமயுகம் படத்தை தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடுகின்றனர். சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் பிரமயுகத்தை தெலுங்கில் வெளியிடுகிறது. இதையடுத்து க்ரிஷ் ஏடி. இயக்கியிருக்கும் பிரேமலு படத்தையும் தெலுங்கில் வெளியிட உள்ளனர். இது மலையாளப் படம் என்றாலும், கதை ஹைதராபாத்தில் நடப்பதால் படத்துக்கு பிரேமலு என்று பெயர் வைத்திருந்தனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகியிருக்கும் இப்படத்தை தெலுங்கில் வெளியிடுவதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.
மலையாள சினிமா தெலுங்கு மாநிலங்களில் கால்பதிக்கும் அதேவேளை, இங்கு கோலோச்சியிருந்த தமிழ் சினிமா தொடர்ந்து சறுக்கி வருகிறது. குறிப்பாக, ரஜினி நடித்த லால் சலாமின் தெலுங்குப் பதிப்பு ஆந்திரா, தெலுங்கானாவில் தோல்வியடைந்ததோடு பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.