தமிழில் வெளியாகும் மலையாள சூப்பர்ஹிட் திரைப்படம் பிரேமலு!
இந்த வருடம் மலையாளத்தில் வெளியான ஆபிரகாம் ஓஸ்லெர், பிரேமலு, அன்வேஷிப்பின் கண்டெத்தும், பிரமயுகம், மஞ்சுமல் பாய்ஸ் அகிய படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்றன. இதில் மஞ்ஞுமல் பாய்ஸ் 100 கோடிகளைக் கடந்து மாவெரும் வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 33 கோடிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 50 கோடிகளை படம் தமிழ்நாட்டில் வசூலிக்கும் என கணித்துள்ளனர்.
இந்த ஐந்தில், 75 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இரண்டாவது இடத்தில் பிரேமலு உள்ளது. ஹைதராபாத் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த காதல் படத்தை க்ரிஷ் ஏடி இயக்கியிருந்தார். தண்ணீர் மத்தன் தினங்கள், சூப்பர் சரண்யா போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் க்ரிஷ் ஏடி. பிரேமலு படத்தை நடிகர் ஃபகத் ஃபாசில், இயக்குநர் தில்லீஷ் போத்தன், திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
பிப்ரவரி 9 வெளியான பிரேமலு கேரளாவில் அமோக வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி, மார்ச் 8 ம் தேதி தெலுங்கில் வெளியிட்டார். தற்போது தமிழில் படத்தை ‘டப்’ செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
வரும் மார்ச் 15 பிரேமலுவின் தமிழ் டப்பிங்கை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை தேதியை உறுதி செய்யவில்லை.