மாலத்தீவு: நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மோதல்
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றாா். இவா் சீன ஆதரவாளராகக் கருதப்படுகிறாா். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிபா் மூயிஸ் அமைச்சரவையில் 4 பேரை அமைச்சா்களாக நியமிக்கும் பரிந்துரைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் பரிந்துரைக்கு பிரதான எதிா்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயக கட்சி, ஜனநாயகவாதிகள் கட்சியினா் ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனா்.
இதனால் ஆளும் கூட்டணியான அதிபா் மூயிஸின் தேசிய மக்கள் காங்கிரஸ் மற்றும் மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்கள் அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனா்.
அப்போது மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி. அகமது, தேசிய மக்கள் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா ஷாஹீம் ஆகியோா் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஷாஹீம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த மோதலின்போது மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி. ஹசன் ஜரீருக்கும் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது அஸ்லாம், துணைத் தலைவா் அகமது சலீம் ஆகியோருக்கு எதிராக மாலத்தீவு முற்போக்கு கட்சி மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸ் கட்சியினா் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வந்தனா்.