போதை பொருள் கடத்தில் பணத்தில் ஜாஃபர் சாதிக் தயாரித்த ‘மங்கை’ படம்! ரிலீஸ் ஆகுமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் முன்னாள் திமுக உருப்பினருமான ஜாஃபர் சாதிக், போதை பொருள் கடத்தல் வழக்கில் தேசிய போதை தடுப்பு துறை அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இவர், ஏற்கனவே சில தமிழ் திரைப்படங்களை தயாரித்திருந்த நிலையில், தற்போது மங்கை என்ற படத்தையும் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த வாரம் வெளியாக இருந்தது.
கயல் ஆனந்தி நடித்த மங்கை திரைப்படம்…
கயல் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான ஆனந்தி, மங்கை படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் இணைந்து பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற சிவின் கணேசனும் நடித்திருக்கிறார். கூடவே துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஆதித்யா கதிர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம், ஆண்-பெண் பாகுபாடு குறித்து பேசியுள்ளது. இப்படம், கடந்த 1ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், ஜாஃபர் சாதிக் திடீரென்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்தை அமைச்சர் குபேந்திரன் காமாட்சி என்பவர் இயக்கியிருக்கிறார்.
படம் வெளியாகுமா?
மங்கை படத்தின் முதற்கட்ட ரிலீஸ் பணிகளின் போதுதான் ஜாஃபர் சாதிக்கின் பிரச்சனைகள் வெளியாக ஆரம்பித்தன. தற்போது அவற்றுக்குறிய ஆதாரங்கள் கிடைத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால், படம் இப்போதைக்கு வெளியாவது சந்தேகம்தான் என பேசப்படுகிறது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் பேட்டி:
ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததை தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் இந்த கைது குறித்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
முழு பின்னணி..
ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என ஞானேஷ்வர் தெரிவித்தார். மெத்தம்பெட்டமைன் தயாரிப்பின் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.