திமுக – காங்கிரஸ் கூட்டணியில் 2 இடங்களை கேட்கும் மநீம? – எந்தெந்த தொகுதிகள் தெரியுமா?

நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணியில் இடம்பெற இருப்பதாகவும், கோவை உள்ளிட்ட 2 தொகுதிகளை கேட்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதில், கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சியின் சென்னை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
இதனையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் நீதி மய்ய கட்சியின் கோவை மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, திமுகவுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.