மணிப்பூர்: தமிழர்கள் வாழும் மோரே நகரில் கடும் துப்பாக்கி சண்டை- போலீஸ் கமாண்டோ பலி- பதற்றம் நீடிப்பு
மோரே: மணிப்பூரில் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் மியான்மர் எல்லை நகரமான மோரேவில் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி ஆயுத குழுவினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் போலீஸ் கமாண்டோ ஒருவர் பலியானார். இதனால் மோரே நகரில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் 10 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 200க்கும் மேற்பட்டோர் இந்த வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் பாதுகாப்பு படையினருக்கும் குக்கி இன ஆயுத குழுவினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
மணிப்பூரின் மோரே நகரில் அதிக எண்ணிக்கையில் மோதல்கள் தொடருகின்றன. மோரே நகரில்தான் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். மோரே நகரில் தமிழ் சங்கம் நடத்தும் பள்ளிக் கூடம், கோவில் ஆகியவையும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போதைய மோதல்களில் தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை மோரோ நகரில் எஸ்பிஐ வங்கி கிளை அருகே வார்டு எண் 7 பகுதியில் குக்கி ஆயுத குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் இந்த சண்டை நீடித்தது. இந்த மோதலில் சமோர்ஜித் என்ற போலீஸ் கமாண்டோ துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோரே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாதுகாப்பு படையினர் மீது குக்கி ஆயுத குழுவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இம்மோதலைத் தொடர்ந்து மோரே சுற்று வட்டார பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.