மஞ்சும்மல் பாய்ஸுக்கு சோலி முடிஞ்சது… ரெட் ஜெயண்ட் உதவியுடன் தமிழ்நாட்டில் ரிலீசாகும் மற்றுமொரு மலையாள படம்
தமிழ்நாட்டு திரையரங்குகள் முழுக்க தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் எனும் மலையாள படத்தின் ராஜ்ஜியம் தான். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கனலில் அமைந்துள்ல புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் ஆங்காங்கே குணா பட ரெபரன்ஸும் இருந்தது அப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது.
கடந்த பிப்ரவரி 22-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் மூன்று வாரங்களைக் கடந்து தமிழ்நாட்டில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மட்டும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் மட்டுமின்றி மலையாளத்தில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன பிரேமலு என்கிற ரொமாண்டிக் திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.
பிரேமலு திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. மஞ்சும்மல் பாய்ஸை கொண்டாடிய தமிழ்மக்கள் பிரேமலு படத்தையும் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கையோடு அப்படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம். அப்படத்தின் தமிழ் பதிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாக இருக்கும் ரெட் ஜெயண்ட் பிரேமலு படத்தை ரிலீஸ் செய்வதால் அதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிரேமலு திரைப்படத்தை கிரிஷ் என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்தில் நஸ்லென் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக டிரெண்டிங் நாயகி மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் பகத் பாசில் தயாரித்துள்ளார். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் மேற்கொண்டிருக்கிறார். மஞ்சும்மல் பாய்ஸ் ரேஞ்சுக்கு பிரேமலு படத்துக்கும் தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.