மார்கழி 27 கூடாரவல்லி நோன்பு; என்ன ஸ்பெஷல்?
மார்கழி 27 அன்று, கூடாரவல்லி நாளில் குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடிய பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.
திருப்பாவை – 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!
இந்தப் பாடலின் மூலம் பாவை நோன்பு நோற்பது குறித்துச் சொல்லியிருக்கிறார் ஆண்டாள்.
இவ்வுலகில் வாழும் மக்களே கேளுங்கள். நாம் பாவை நோன்பு நோற்கும்போது, கடைபிடிக்கவேண்டிய செயல்கள் என்னவென்று, கேளுங்கள்.
நெய், பால் முதலான உணவுகளைச் சாப்பிடமாட்டோம். விடியற்காலையில், சூர்யோதயத்துக்கு முன்னரே எழுந்து குளித்துவிடுவோம். அதேசமயம், எங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காக, கண்களுக்கு மை தீட்டிக் கொள்ள மாட்டோம். வாசனை மலர்களை சூடிக் கொள்ள மாட்டோம். நன்னெறியாளர்கள், ஆகாது என்று எதையெல்லாம் சொல்லி வைத்தார்களோ, அதை அறவே செய்யமாட்டோம். பிறருக்குத் தீங்கு தரும் சொற்களை ஒருபோதும் பேசமாட்டோம்.
அதேசமயம், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமனின் புகழைப் பாடிக்கொண்டே இருப்போம். அற வழியில் நடப்போம். தர்மசிந்தனையுடன் இருப்போம். தர்ம காரியங்களைச் செய்து பிறருக்கு உதவியாக இருப்போம்.
இப்படியெல்லாம் இருந்துகொண்டே, பாவை நோன்பு விரதத்தையும் மேற்கொள்வோம். என்கிறாள் ஆண்டாள்.
கூடாரவல்லி தினம்
கூடாரவல்லி தினம் என்றால், கண்ணன், ஆண்டாளை ஆட்கொள்ளப் போவதாக ஆண்டாள் உறுதியாக நம்பிய நன்னாள். ஜீவாத்மா – பரமாத்மா தத்துவத்தில், பரமாத்மா வந்து ஜீவாத்மாவை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொள்வது என உறுதி என்பதை நிருபீத்த வைபவம்!
எனவே இந்த நாளில், அனைவரும் இல்லங்களிலும் அருகில் உள்ள கோயில்களிலும் பால்சோறு எனப்படுகிற அக்கார அடிசில் செய்து, பகவானுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அக்கம்பக்கத்தார் அனைவரையும் அழைத்து பகிர்ந்து வழங்குங்கள்.
பெண்கள் புத்தாடை அணிந்து கொள்வதும் அணிகலன்கள் அணிந்து கொள்வதும் சுபிட்சத்தைக் கொடுக்கும். ஆண்டாளின் மன விருப்பத்தை நாராயணன் நிறைவேற்றித் தந்தருளியது போல், நம் விருப்பங்களை அந்த ஆண்டாளே நிறைவேற்றி அருள்வாள்.
முடிந்தால், ஆண்டாளுக்கு அழகாய் ஒரு புடவை எடுத்து சார்த்துங்கள். ரோஜாவும் சாமந்தியும் முல்லையும் தாமரையும் என மலர்கள் சூட்டுங்கள். மகிழ்ந்து போவாள் ஆண்டாள்.
பிரபல பாடகி அனிதா குப்புசாமி, கூடாரவல்லி தினத்தன்று பாவை நோன்பு எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.