மார்ச் 31 நெருங்கியது.. வருமான வரி சேமிக்க கடைசி நிமிட டிப்ஸ்..!
சென்னை: மார்ச் மாதம் வந்தாலே வருமான வரி வரம்புகள், சலுகைகள் தொடர்பான விவாதங்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது. ஏனெனில் நிதியாண்டு முடிவதால் வரி சலுகை கோர விரும்புவோர் அதற்காக தேடி தேடி முதலீடு செய்வர்.
ஆனால் இனி வரும் காலங்கள் இப்படி இருக்க போவதில்லை. முதலீடு தொடர்பான அணுகுமுறையை நாம் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தற்போது வருமான வரி தாக்கல் செய்ய மக்களுக்கு பழைய முறை மற்றும் புதிய முறை என இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பழைய நடைமுறையில் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் கீழ் பல்வேறு வரி சலுகைகளை மக்கள் கோர முடியும். முதலீடு, காப்பீடு பிரீமியம் என பல்வேறு செலவுகளுக்கு நாம் ரூ.1.5 லட்சம் வரை சலுகை பெற முடிகிறது. இதற்கான ஆவணங்களை நாம் தாக்கல் செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் புதிய நடைமுறையில் இது போன்ற எந்த வரி சலுகையும் கோர முடியாது. ஆனால் வரி விகிதங்கள் என்பது பழைய முறையை விட குறைவானதாக இருக்கும்.
புதிய வரி தாக்கல் முறைக்கு மக்களை முழுவதுமாக கொண்டு வருவது தான் அரசின் திட்டம். படிப்படியாக மக்களை இதற்கு மாற்றுவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. எனவே வருங்காலங்களில் மக்கள் வரி சலுகைக்காக முதலீடுகளை செய்யாமல், தங்களின் தேவை மற்றும் நிதி இலக்கினை அடிப்படையாக கொண்டு முதலீடுகளை மேற்கொள்ளும் அணுகுமுறைக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்களில் ஓர் நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் செலுத்தும் பிரீமியம் தொகை வரிக்கு உட்பட்டது, எண்டோமென்ட் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான பிரீமியங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் வரிக்கு உட்பட்டது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை கவனித்தால் படிப்படியாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி முழுமையாக நீக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் போது நிதி இலக்கினை அடிப்படையாகக் கொண்டுதான் முடிவெடுக்க வேண்டுமே தவிர வருமான வரி சேமிப்பை அடிப்படையாகக் கொண்டு எந்த முதலீட்டையும் தேர்வு செய்யக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காக காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்யாமல் , அது ஒரு அத்தியாவசிய தேவை என்பதை கருதி முதலீடு செய்ய வேண்டும்.
வரி சலுகை வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தினை வாங்குவது, மியூச்சுவல் ஃபண்டுகள், பிக்ஸட் டெபாசிட்டுகளில் பணம் போடுவது ஆகியவற்றை மாற்றி உங்களின் நிதி தேவையை அடிப்படையாக கொண்டு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டி இருக்கும். மக்கள் முதலீடுகள் தொடர்பான மனப்பான்மையை மாற்றி கொள்ள வேண்டிய காலம் இது என்கின்றனர் நிபுணர்கள்.