மார்கோஸ், டுட்டர்டே ஆதரவாளர்கள் தனித்தனி பேரணி

பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கும் முன்னாள் அதிபர் டுட்டர்டேக்கும் இடையே நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸின் இரு பெரும் அரசியல் குடும்பங்களின் ஆதரவாளர்களும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) அன்று தனித்தனி பேரணிகள் நடத்தியுள்ளனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் முன்னாள் அதிபர் டுட்டர்டேயின் மகளை துணை அதிபர் வேட்பாளராகச் சேர்த்துக்கொண்டு அதிபர் தேர்தலில் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் வெற்றி பெற்றார். தற்பொழுது அந்தக் கூட்டணி முறிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பிலிப்பீன்ஸில் 2025ஆம் ஆண்டில் இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், 2028ஆம் ஆண்டில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. துணை அதிபர் சாரா 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டி போட எண்ணியுள்ள நிலையில், இரு குடும்பங்களும் தத்தமது ஆதரவாளர்களைத் திரட்டவும் முக்கிய அரசு பதவிகளில் தமது ஆதரவாளர்களை நியமிக்கவும் முட்டி மோதி வருகின்றன.
ஆகக் கடைசியாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தும் முயற்சிக்கு அதிபர் மார்கோஸ் ஆதரவு அளித்துள்ளார். இதை முன்னாள் அதிபர் டுட்டர்டேயும் அவரது மகளான துணை அதிபர் சாரா டுட்டர்டேயும் எதிர்க்கின்றனர்
அதிபர் மார்கோஸின் இந்த முயற்சி அவரது பதவிக்காலத்தை மேலும் ஓர் ஆறு ஆண்டு தவணைக் காலத்துக்கு அதிகரிக்க வழி வகுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அதிபர் ஆறு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அவருக்கும் சாரா டுட்டர்டேவுக்கும் இடையே மோதல் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
“நமது அரசியல் அமைப்புச் சட்டம் நன்கு செயல்படுகிறது. எதற்காக பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாத தலைவலியை இழுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அண்மைய பேட்டி ஒன்றில் முன்னாள் அதிபர் டுட்டர்டே கருத்துத் தெரிவித்தார்.