இந்த தேதியை குறிச்சி வெச்சுக்கோங்க..! போலியோ சொட்டு மருந்து தேதி அறிவிப்பு..!
நாடு முழுவதும் நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக, தான் தற்போது பெரும்பாலான ஆட்கொல்லி நோய்கள் அனைத்தும் கட்டுப்பாட்டுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நாடு முழுவதும் சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு பிறந்த குழந்தைகள் முதல் குறிப்பிட்ட வயது வரையிலான குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நாடு முழுவதும் வரும் மார்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கும் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. மார்ச் 3ம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என சிறப்பு மையங்களில் முகாம் நடைபெறும். இம்மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்படும். நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட சுகாதாத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.