மாருதி வாலை ஒட்ட நறுக்க போறாங்க… மைலேஜை வாரி வழங்கும் காரை கண்ணில் காட்டியது டாடா… இந்தியாவே வெயிட்டிங்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா நெக்ஸான் (Tata Nexon). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) ஆகிய வெர்ஷன்களில் கிடைத்து வருகிறது. இந்த வரிசையில் இதன் சிஎன்ஜி (CNG) வெர்ஷனும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.

அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) வாகன திருவிழாவில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி கார் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 வாகன திருவிழா இன்றுதான் (பிப்ரவரி 1) தொடங்கியது.

புது டெல்லியில் (New Delhi) நடைபெற்று வரும் இந்த வாகன திருவிழாவில் நிறைய வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரும் ஒன்றாகும். பொதுவாக நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்கள் (NA Petrol Engines) உடன்தான் சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும்.

ஆனால் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரானது, 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டர்போ சிஎன்ஜி ஆப்ஷன் வழங்கப்படும் முதல் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை உருவாக்கும்.

ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட்புட் சற்று குறைவாக இருக்கலாம். எனினும் சிறப்பான மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற சிஎன்ஜி கார்களை போல், டாடா நெக்ஸான் சிஎன்ஜ காரும், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்க்குகள் உடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சிஎன்ஜி கார்களின் பின் பகுதியில் டேங்க்குகள் இடத்தை அடைத்து கொள்ளும் என்பதால், போதுமான அளவிற்கு பூட் ஸ்பேஸ் இருக்காது. எனவே லக்கேஜ்களை வைப்பதில் சிரமங்கள் ஏற்படும். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த ட்யூயல் டேங்க் செட்-அப், வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவிற்கு பூட் ஸ்பேஸ் வழங்குகிறது.

எனவே டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில், வாடிக்கையாளர்கள் லக்கேஜ்களையும் தாராளமாக வைத்து கொள்ளலாம். இன்று தொடங்கியுள்ள பாரத் மொபிலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 வாகன திருவிழாவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் சிஎன்ஜி உள்பட ஒட்டுமொத்தமாக 8 கார்களை காட்சிக்கு வைத்துள்ளது.

இதில், டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV), டாடா கர்வ் எஸ்யூவி (Tata Curvv SUV), டாடா அல்ட்ராஸ் ரேஸர் கான்செப்ட் (Tata Altroz Racer concept), டாடா சஃபாரி டார்க் எடிசன் கான்செப்ட் (Tata Safari Dark Edition Concept), டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி டார்க் (Tata Nexon EV Dark) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *