2025-ம் ஆண்டில் 7 சீட்டர் கிரான்ட் விடாரா… அறிமுகப்படுத்தும் மாருதி!
சமீபத்தில் டாடா நெக்ஸான், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ் கார்களை விட காம்பேக்ட் SUV பிரிவில் தனித்துவமான மாடல் என்ற பெயரைப் பெற்றுள்ளது மருதி சுசூகியின் கிராண்ட் விடாரா (Grand Vitara). இந்நிலையில் தற்போது இந்தக் காரில் Y17 ரெண்டர் என்ற பெயரில் 7 இருக்கைகள் கொண்ட மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது மாருதி நிறுவனம். 2025-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் இந்த கார், 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட வேரியண்டுகளில் வரும் என எதிர்பார்க்கலாம்.
இப்போதுள்ள கிரண்ட் விடாரா மாடலைப் போலவே Y17 இருந்தாலும், இது கொஞ்சம் அதைவிட நீளம் அதிகமானது. இந்தக் காரை SRK Design வடிவமைத்துள்ளனர். ஹெக்ஸோகோனல் வடிவத்தில் அமைந்த கருப்பு நிற க்ரில், சுசூகி பேட்ஜுடன் கூடிய நல்ல அடர்த்தியான க்ரோம் பார், நீள்வாக்கிலான LED ஃபாக் விளக்குகள், கூர்மையான ட்ரிபிள் பீம் LED ஹெட்லைட், கனமான போனெட் என இதன் தனித்துவ டிஸைனை சொல்லிக் கொண்டே போகலாம். கிராண்ட் விடாராவின் தற்போதைய வீல்பேஸ் 2,600mm ஆகும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் வாகனங்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், அதை நிறைவேற்றும் பொறுட்டு மிதமான ஹைபிரிட் மற்றும் பவர்ஃபுல் ஹைபிரிட் உள்பட மூன்று மாடல்களில் இந்தக் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தற்போது இருக்கக் கூடிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் K15C மிதமான ஹைபிரிட் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் பவர்புல் ஹைபிரிட் பெட்ரோல் இஞ்சின் என இரண்டுமே புதிதாக வரவுள்ள 7 இருக்கைகள் கொண்ட கிராண்ட் விடாரா (Y17) காரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட் விடாராவின் தற்போதைய மாடல் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 6,988 கார்கள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
காரின் ஸ்டாண்டர்டு மாடல்களுக்கு பெட்ரோல் டூயல் ஜெட் மற்றும் டூயல் VVT ஸ்மார்ட் ஹைபிரிட் இஞ்சின் பொறுத்தபடும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம் காரின் உச்சபட்ச மாடல்களுக்கு டொயேட்டோவின் பெட்ரோல் ஹைபிரிட் இஞ்சின் பொறுத்தப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 7 இருக்கைகள் கொண்ட மாருதி சுசூகி கிராண்ட் விடாரா அர்பன் க்ரூய்ஸர் கார் டொயேட்டோவின் ஹைரைடரை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டுள்ளது.
Y17 மாடல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகும் போது, மாருதி சுசூகி நிறுவனத்தின் ICE இஞ்சினில் இயங்கும் மிகப்பெரிய SUV கார் இதுவாகத்தான் இருக்கும். இதன் ஆரம்ப விலை தோராயமாக ரூ.15 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் அல்கஸார், மஹிந்தரா XUV700, Citroen C3 ஏர்க்ராஸ், டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டார் ப்ளஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ரெனால்ட் டஸ்டர் போன்றவை கிராண்ட் விடாரா Y17 காரின் போட்டியாளர்கள்.