பாகிஸ்தானின் முதல் பெண் முதலமைச்சராக மரியம் நவாஸ் பதவியேற்பு
பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமை மரியம் நவாஸுக்கு கிடைத்துள்ளது.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த தலைவரான மரியம் நவாஸ் நேற்று (26) பஞ்சாப் மாகாண முதல்வராகப் பதிவியேற்றதன் மூலம் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
50 வயதான மரியம் நவாஸ் தனது தந்தையும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரது முன்னிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வராகப் பதிவியேற்றுள்ளார்.
கூட்டணிக் கட்சிகள்
இந்நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பஞ்சாப் மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 327 தொகுதிகளில், மரியம் நவாஸ் கட்சி 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி சார்பில் சுயேட்சைகளாகப் போட்டியிட்ட வேட்பாளர்கள் மொத்தம் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.
கூட்டணிக் கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி(பி.பி.பி), பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -கியூ(பி.எம்.எல்-கியூ) மற்றும் இஸ்டேகாம்-ஐ-பாகிஸ்தான் கட்சி(ஐபிபி) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மரியம் நவாஸ் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதன் போது உரையாற்றிய மரியம் நவாஸ், தனது தந்தை அலங்கரித்த பதவியில் தான் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். பஞ்சாப் மாகாணத்தின் ஒவ்வொரு பெண்ணும், பெண் முதல்வரைப் பார்த்து பெருமிதம் கொள்வதாகவும், இதே போல, பெண்கள் தலைமைப் பதவியேற்கும் சூழல் எதிர்காலத்திலும் தொடரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என உறுதியளித்தார்.