மாசி மகம் 2024 : தேதி, நேரம் மற்றும் இந்த நாளின் சிறப்புகள் என்ன..?
பொதுவாகவே, அனைத்து மாதங்களில் வரும் பௌர்ணமி ஒவ்வொரு வகையிலும் சிறப்புடையது. அந்த வகையில், தமிழ் மாதமான மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் மகம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளை தான் நாம் மாசி மகம் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். மாசி மகத்திற்கு பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம் அல்லது கோயிலில் பூஜை செய்யலாம். பெரும்பாலான கோவில்களில் மாசி மகம் பூஜை மற்றும் சிறப்பு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
வழிபடப்படும் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் கடற்கரைகள் ஆறுகள் அல்லது குளங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அங்கு பூஜைகள் மற்றும் சடங்குகள் நடைபெறும் மற்றும் மங்களகரமான நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மாசி மகத்தன்று கடல் ஆறு அல்லது குளங்களில் நீராடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாசி மகம் 2024 தேதி மற்றும் நேரங்கள்:
2024 ஆம் ஆண்டுக்கான மாசி மகம் திருவிழா 24 பிப்ரவரி 2024 சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 4:55 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 25ஆம் தேதி மாலை 6:51 மணி வரை பௌர்ணமி திதி உள்ளது. மகம் நட்சத்திர பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 8:40 மணிக்கு தொடங்கி, பிப்ரவரி 24ஆம் தேதி இரவு 11:05 மணி வரை உள்ளது. எனவே, நீங்கள் பிப்ரவரி 24ஆம் தேதி காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும் கடல், ஆறு மற்றும் குளத்திற்கு சென்று புனித நீராடலாம். ஒருவேளை உங்களால் கடல், ஆறு, குளத்திற்கு சென்று புனித நீராட முடியவில்லை என்றால், வீட்டில் இருந்தே விரதம் வீட்டில் இருந்து சிவபெருமானையும் பார்வதி தேவையும் நினைத்து வழிபட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் உங்களது ஏழு தலைமுறை பாவம் தீரும் என்பது ஐதீகம்.
கும்பகோணத்தில் மாசி மகம் 2024:
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகம் சிறப்பு முக்கியத்துவம் பெறுவதால், தமிழகத்தில் உள்ள கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் மாசி மகம் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். அதுபோல் இந்நாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபடுவது மட்டுமின்றி முருகப்பெருமானையும் வழிபடுவதற்கு உகந்த நாளாகும். மேலும் உங்களது தோஷம் நீங்கும் புண்ணியம் நாளாகவும் கருதப்படுகிறது.