ஸ்ரீரங்கத்தில் இன்று மாசி கருடசேவை… குவிந்த பக்தர்கள்!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கடந்த 12ம் தேதி மாசி தெப்பத்திருவிழா துவங்கி இம்மாதம் 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழாவின் 3ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் கற்பகவிருட்ச வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் திருவிழாவின் நான்காம் நாளான இன்று காலை 6.30 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார்.
பகல் 1 மணிக்கு மூலத்தோப்பு மேலூர்ரோடு காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபம் வந்தடைவார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடைபெறும். மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உள்வீதியை வலம் வந்து இரவு வாகன மண்டபம் சென்றடைவார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஒரு ஆண்டில் நம்பெருமாள் நான்கு முறை கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் 3 முறை தங்க கருடவாகனத்திலும், மாசிமாதத் தெப்பத்திருவிழாவின் பொழுது வெள்ளி கருடவாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாளை சேவித்து சென்றால் காசிக்குச்சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே வெள்ளி கருடவாகன சேவையை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.