தமிழ்நாட்டில் இடம்பெரும் கொடூரக் கொலைகள்: தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பகீர் தகவல்
இந்தியாவின், தமிழ்நாடு – கோவை மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கடித்து மேற்கொள்ளப்படும் கொலைமுயற்சிகள் தொடர்பில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் குற்றம்சுமத்தியுள்ளார்.
ஆற்றில் இறங்கி நீராடுவோரின் கால்களை இழுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர், இறந்தவரின் உடலை பாறையின் இடுக்குகளில் செருகி வைக்கும் சம்பவம் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், பாக்யராஜின் குற்றச்சாட்டை கோவை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மறுத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் ஆற்றில் குளிக்க செல்வோரை, சிலர் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்வதும், அதன்பின்னர் அவர்களின் உடல்களை மீட்டுக் கொடுத்து பணம் பெறும் சம்பவங்கள் இடம்பெறுவதாக பாக்யராஜின் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவங்கள்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வனபத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
அங்கு அம்பராம்பாளையம் என்று அழைக்கப்படும் ஆறு உள்ளது. இந்த ஆற்றிலேயே குறித்த கொலைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நீரில் மூச்சை அடக்கக்கூடிய ஒருவர், அந்த ஆற்றில் நீராடுவோரின் கால்களை பிடித்து இழுத்து அவரை பாறைக்கு இடையில் செருகிவிடுவார் என்றும் பின்னர், மீட்புப்பணியில் ஈடுபடுவோரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தாம் கண்டு பிடித்ததைப்போன்று உடலை மீட்டு வருவார் என்றும் பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் கருத்து
இந்நிலையில், பாக்யராஜின் கூற்றை மறுத்துள்ள கோவையின் பொலிஸ் அத்தியட்சகர், குற்றச்சாட்டின்படி சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆற்றில் 2022, 2023இல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவில்லை என்றும் எனினும் 2022இல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாக்யராஜ் கூறிய தகவல் பொய்யானது. அத்துடன், இத்தகைய வதந்தி பரப்புவது என்பது குற்ற செயலாகும் என்றும் தெரிவித்துள்ளார்.