மகிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்கப்பட்ட விவகாரம்: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கடந்த 2018 ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அடிப்படை மனித உரிமை மீறல்
அரசியலமைப்பு பிரகாரம் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் பிரதமருக்கு இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்தமை சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இதன்பிரகாரம் குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *