வாய்ப்பே கொடுக்காமல் இருந்திருக்கலாம்.. அரைசதம் அடித்தும் தூக்கி எறியப்பட்ட இந்திய வீரர் ஃபாசல்
இந்திய அணியில் 2016இல் ஃபைஸ் ஃபாசல் என்ற துவக்க வீரருக்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இப்படி ஒரு வீரர் இருக்கிறார் என்பதே நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கக் கூடும். ஆனால், ஃபைஸ் ஃபாசல் அந்தப் போட்டியில் அரைசதம் அடித்தார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
ஆனால், அதன் பின் ஃபைஸ் ஃபாசல் எந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு மாற்று வீரராக கூட இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் குறிப்பாக ரஞ்சி தொடரில் ரன் குவித்து தள்ளிய ஃபைஸ் ஃபாசல், சர்வதேச போட்டிகளில் ஆட முடியாத சோகத்தோடு சமீபத்தில் தனது 38 வயதில் ஓய்வு பெற்றார்.
2016இல் நடந்த இந்தியா – ஜிம்பாப்வே தொடரில் ஃபைஸ் ஃபாசலுக்கு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஜிம்பாப்வே அணி மோசமான நிலையில் இருந்ததால், முழு பலம் கொண்ட இந்திய அணியை அனுப்பாமல் பல வீரர்களுக்கு இந்திய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஃபைஸ் ஃபாசல் ஒருநாள் அணியில் மாற்று துவக்க வீரராக இடம் பிடித்தார். ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜிம்பாப்வே அணி 123 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆன நிலையில் இந்திய அணி 21.5 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது.
துவக்க வீரர்களாக இறங்கிய கே எல் ராகுல் 63 ரன்களும், ஃபைஸ் ஃபாசல் 61 பந்துகளில் 55 ரன்களும் சேர்த்து இருந்தனர். அந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் துவக்க வீரராக ஆடிய கருண் நாயர் பெரிதாக ரன் குவிக்காத நிலையில், ஃபைஸ் ஃபாசலுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது.
ஆனால், அவருக்கு அதன் பின் இந்திய அணியில் இருந்து அழைப்பு வரவில்லை. அப்போதே அவருக்கு 31 வயதான நிலையில் அதன் பின் ரஞ்சி ட்ராபி தொடரிலும், இங்கிலாந்து நாட்டின் கவுன்டி டெஸ்ட் தொடரிலும் மட்டுமே ஆடி வந்த அவர் தனது 38 வயதில் ஓய்வு பெற்றார்.