ஒருவேளை பாபர் மசூதி போல கியான் வாபி மசூதியும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு இரையாகுமானால்…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவானது அதிர்ச்சியளிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டி பெரும் அநீதியை பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்களுக்கு பாஜக அரசு விளைவித்திருக்கும் தற்சமயத்தில், கியான்வாபி மசூதி விவகாரத்திலும் சிக்கலை உருவாக்குவது போல அமைந்திருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

நாடு விடுதலைபெற்றபோது இருந்த வழிபாட்டுத்தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்தவொரு வழக்கையும் தொடுக்க முடியாது என வழிப்பாட்டுத்தலங்கள் சட்டம் – 1991 ஆனது தெளிவுப்படுத்துவதால் கியான்வாபி மசூதி குறித்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதே சட்டத்தின் வழியேயான சரியான முடிவாகும். அதனை விடுத்து, கியான்வாபி மசூதிக்குள் இந்துக்கள் எனப்படுவோர் வழிபாடு செய்ய அனுமதிப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, சட்ட விரோதமுமாகும்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கு, உரிமையியல் வழக்கென இரண்டிலும் நீதி நிலைநாட்டப்படாது, தவறான முன்னுதாரணத்தை பெருங்கறையாக வரலாறு பதிவுசெய்திருக்கும் நிலையில், தற்போது வந்திருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் முடிவும் அவ்வகையினதேயாகும்.

ஒருவேளை, பாபர் மசூதி போல, கியான் வாபி மசூதியும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு இரையாகுமானால், இந்தியப்பெருநாடு பிளவுபட்டு பேரழிவைச் சந்திக்குமென எச்சரிக்கிறேன் என சீமான் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *