கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு குப்பைகளை அள்ளிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்..!
மயிலாடுதுறை நகராட்சியில் மெகா தூய்மை பணிகளை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கையில் கிளவுசை மாட்டிக் கொண்டு களத்தில் இறங்கி குப்பைகளை அகற்றினார்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மெகா தூய்மைப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை 5-வது புதுத்தெருவில் “கிளீன் மயிலாடுதுறை கிரீன் மயிலாடுதுறை” என்ற சிறப்பு திட்டத்தில் தொடங்கிய பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை நகரில் 86 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த பணிகள் தொடங்கின. 15 ஜேசிபி இயந்திரங்கள், 40 டிராக்டர்களுடன் நகராட்சி ஊழியர்கள் மற்றும் 400 தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாப்படுகை கிட்டப்பா பாலம் பகுதிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை கண்டவுடன், தானே களத்தில் இறங்கி கையில் கிளவுஸ் மாட்டிக் கொண்டு குப்பைகளை அகற்ற தொடங்கினார்.
சுமார் 15 நிமிடங்கள் வரை மாவட்ட ஆட்சியர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால், அவருடன் சென்ற கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஷபீர் ஆலம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக மயிலாடுதுறை நகராட்சியை தூய்மையான நகராட்சியாக பராமரிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.