100வது டெஸ்ட்டில் மெகா சாதனை.. உலக அளவில் 2ஆம் இடம் பிடிக்கப் போகும் அஸ்வின்
இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்கும் பட்சத்தில் அது அவரது 100வது போட்டியாக அமையும். அந்தப் போட்டியில் மாபெரும் மைல்கல் சாதனை படைக்க இருக்கிறார் அஸ்வின்.
சமீபத்தில் தனது 100வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய அஸ்வின் இதுவரை 507 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் 100வது டெஸ்ட்டில் ஆடும் போது அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் உலக அளவில் இரண்டாவது இடம் பிடிக்க இருக்கிறார் அஸ்வின். அவர் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் கூட 507 டெஸ்ட் விக்கெட்களுடன் உலக அளவில் இரண்டாம் இடம் பிடிப்பார்.
இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆடிய போது 584 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவருக்கு அடுத்து அஸ்வின் 507 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அனில் கும்ப்ளே இருக்கிறார். அவர் 478 விக்கெட் வீழ்த்தி இருந்தார். நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் கிளென் மெக்கிராத் (446 விக்கெட்கள்) மற்றும் ஷேன் வார்னே (436 விக்கெட்கள்) உள்ளனர்.
இதைத் தவிர 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் உலகின் 76வது வீரர் அஸ்வின் ஆவார். இந்திய அளவில் 14வது இடம் பிடிக்க இருக்கிறார். இந்திய பந்துவீச்சாளர்களில் ஐந்தாவது இடத்தை பிடிப்பார். அஸ்வின் தனது 100வது போட்டியில் ஆடும் அதே போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவும் தனது 100வது டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறார்.