மாதவிடாய் கால சோர்வு பறந்திடும்.. தீர்வு தரும் மூலிகை டீ செய்முறை இதோ!
காய்ச்சல், ஜலதோஷம் என்றால் ஏதோ ஒரு சீசனுக்கு வரக் கூடியது. ஆனால் மாதவிலக்கு காலத்தில் வலியை எதிர்கொள்ள கூடிய பெண்களின் பிரச்னை என்பது மாதந்தோறும் தவறாமல் ஆஜராகிவிடும். பள்ளி, கல்லூரிக்கு செல்வது அல்லது அலுவலக வேலைக்கு செல்வது என்று பெண்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் இது அவர்களுக்கு தொந்தரவு அளிப்பதாக அமையலாம். ஆனால், இதற்கு மூலிகை டீ ஒன்றை தீர்வாக முன்வைக்கிறது ஆயுர்வேத மருத்துவம். இதை பெண்கள் மட்டும்தான் அருந்த வேண்டும் என்பதில்லை. உயர் ரத்த அழுத்த பிரச்னையை எதிர்கொண்டிருப்பவர்களும் கூட அருந்தலாம்.
ஆயுர்வேத மருத்துவரான திக்ஸா பாவ்சர் சவாலியா, தனது இன்ஸ்டாகிராமில் மூலிகை டீ தயாரிப்பது எப்படி என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த மூலிகை டீ-யின் மூலமாக மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு, கவலை, வலி, தலைவலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என்று அவர் தெரிவிக்கின்றார்.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட மூலிகை டீ எதைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது என்று ஆச்சரியம் எழுகிறதா? சாதாரணமாக நம் வீட்டு தோட்டத்தில் உள்ள செம்பருத்திப் பூ மற்றும் வேலிகளில் படர்ந்துள்ள சங்குப்பூ ஆகியவை இதற்குப் போதுமானது.
மூலிகை டீ செய்முறை :
இரண்டு சங்குப்பூ மற்றும் ஒரு செம்பருத்தி பூ ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு கப் அளவு தண்ணீரில் கொதிக்க விட வேண்டும். மிதமான தீயில் 5 நிமிடம் கொதித்த பிறகு, அது பர்பிள் நிறத்திற்கு மாறும். பின்னர் வடிகட்டிய சாறை அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது நற்பலனை தரும்.
View this post on Instagram
இந்த மூலிகை டீ கசப்பு சுவயை கொண்டதாகும். கசப்பு பிடிக்காதவர்கள் கொஞ்சம் தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து அருந்தலாம்.
செம்பருத்தி பலன்கள் :
ஜிங்க், கால்சியம், மேங்கனீஸ், விட்டமின் பி9, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் செம்பருத்தியில் உள்ளன. இதன் டீ அருந்தினால் கொலஸ்ட்ரால் குறையும். உடல் எடை கட்டுப்படும் மற்றும் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
சங்கப்பூ பலன்கள் :
ஊதா நிறத்தில் இருக்க கூடிய சங்குப்பூவில் டீ தயார் செய்து அருந்தினால் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்து நிறைவாக கிடைக்கும். பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படக் கூடிய வலி மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படுகின்ற திரவ கசிவு ஆகியவற்றை தடுக்க இது உதவுகின்றது.
கிராமப்புற பெண்கள் இதன் வேர்களை தங்கள் இடுப்பிலும், கைகளிலும் கட்டிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சரும ஆரோக்கியம், சுவாசக் குழாய் ஆரோக்கியம், செரிமான மேம்பாடு என பல பலன்களை இந்த பூ தருகிறது.