இளம் வயதிலேயே மாதவிடாய் வந்தால் சர்க்கரை நோய் வருமா..? ஷாக் ரிப்போர்ட்!
மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் நடக்கும் ஒரு இயற்கையான செயலாகும். மாதவிடாய் பொதுவாக இளம் பருவத்தில் ஏற்படும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், சிலருக்கு 13 வயதிலேயே மாதவிடாய் வருகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 13 வயது அல்லது அதற்கு முன் மாதவிடாய் வருபவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, பிரிட்டிஷ் மருத்துவ பொது ஊட்டச்சத்து தடுப்பு மற்றும் சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.
20-65 வயதுடைய 17,000 பெண்கள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். 13 வயதிற்குள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், 13 வயதுக்கு முன் மாதவிடாய் தொடங்கும் பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், 65 வயதிற்குள் பக்கவாதம் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நீரிழிவு நோயைத் தடுப்பது எப்படி?
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்: பொதுவாகவே, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருப்பதால், பலர் அவற்றைத் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதால், பல்வேறு நோய்களுடன் நீரிழிவு நோய் அபாயமும் அதிகரிக்க செய்கிறது. எனவே இவற்றுக்கு பதிலாக பால், பழம், கீரைகள், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்துகிறது.
உடற்பயிற்சி: உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமின்றி பல நோய்களை தடுக்கிறது. வழக்கமான உடற்பயிற்சி உடல் பருமனை குறைக்கும். இரத்த சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். எனவே தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க வேண்டும்: உங்கள் உடல் எடை இயல்பை விட அதிகமாக இருந்தால், கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அதிக எடையுடன் இருப்பது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
புகைபிடிக்காதீர்கள்: புகைபிடிப்பதால் பல ஆபத்தான நோய்கள் வருகின்றன. இதில் சர்க்கரை நோய் அடங்கும். எனவே புகைப்பழக்கத்தில் இருந்து விலகி இருந்தால், நீரிழிவு நோயிலிருந்தும் விலகி இருக்க முடியும்.