நடிப்பில் மெருகேறும் சூரி.. வெற்றிமாறனின் கருடன் பட டைட்டில் கிளிம்ப்ஸ் வைரல்!
வெற்றிமாறன் கதை எழுத துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கருடன். அப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடிக்குழுவில் இடம்பெற்ற பரோட்டா காமெடி மூலம், பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சினிமாவில் அறிமுகமான நாள் முதலே காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சூரி, சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் சூரி. திரைப்படம் வெளியாவதற்கு முன்பு வெற்றிமாறனின் இந்த முடிவு குறித்து எதிர்மறையான கருத்துக்கள் எழுந்தாலும், தனது இயல்பான நடிப்பின் மூலம் அவற்றை தகர்த்தெரிந்தார் சூரி. இத்தனை நாட்களாக காமெடியனாக இருந்த சூரியை தனது இயக்கத்தின் மூலம் கதா நாயகனாக உயர்த்தினார் வெற்றிமாறன்.
இந்நிலையில் சூரியை மையமாக வைத்து மேலும் ஒரு படத்தை உருவாக்குகிறார் வெற்றி மாறன். ஆனால் இப்படத்துக்கு அவர் கதை மட்டுமே எழுதுகிறார். துரை செந்தில்குமார் படத்தை இயக்குகிறார். கருடன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ஸ் நேற்று வெளியானது. கிளிம்ஸ் வெளியாகி 22 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வையாளகளை கடந்துள்ளது.
அதில் ‘விஸ்வாசத்துல மனுசனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா, எப்பவுமே நாய் தான் ஜெயிக்கும். ஆனா அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, ஜெயிக்கிறது என்னைக்குமே என் சொக்கன் தான்’ என்ற வசனம் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் சூரியின் சொக்கன் கதாப்பாத்திரம் திரைப்படத்தின் மைய புள்ளியாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் சூரி தன்னுடைய நடிப்பில் மெருகேறி வருவதாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.