மாருசி சுசூகி இடத்திற்கு ஆசைப்படும் MG மோட்டார்ஸ்.. 3 மாசத்துக்கு ஒரு புது கார்..!
இந்திய வாகன தொழில் துறையில் புதிய அத்தியாயம் ஒன்று தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மருதி சுசூகி ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் செல்லும் இந்த துறையில், தனது முத்திரையை பதிக்க வருகிறது புதிய கூட்டணி.
JSW குழுமம் மற்றும் சீன வாகன தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் நிறுவனத்தின் கீழ் இயங்கும் MG மோட்டார் இந்தியா ஆகியோர் கூட்டாக ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளன. இந்த கூட்டு நிறுவனம் மின்சார கார்கள் மற்றும் பெட்ரோல் கார்கள் ஆகிய இரண்டையும் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய பெயர்: JSW குழுமம், எம்ஜி மோட்டார் இந்தியாவில் 35% பங்குகளை கையகப்படுத்தியுள்ள நிலையில், புதிய கூட்டு நிறுவனத்தின் தலைமை கமிட்டியின் உறுப்பினரான பார்த் ஜிண்டால், இன்று புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தினார். இந்த கூட்டு நிறுவனத்தின் பெயர் JSW MG மோட்டார் இந்தியா என இருக்கும்.
முக்கிய இலக்கு: இந்த கூட்டணி நிறுவனத்தின் மூலம், இந்திய வாகன சந்தையில் பெரும் பங்கு வகிக்க இந்நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. மின்சார கார்கள் மற்றும் பெட்ரோல் கார்கள் என இரண்டையும் தயாரிப்பதன் மூலம், இந்திய வாகன சந்தையின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இந்திய வாகன துறையில் நிலவும் போட்டி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது மாடல் கார்: JSW MG மோட்டார் இந்தியா என்ற புதிய கூட்டணி ஒவ்வொரு 3-4 மாதத்திற்கும் புதிய கார்களை அறிமுகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது, இதன் மூலம் இந்தியாவில் மீண்டும் ஒரு மாருதி மொமெண்ட் உருவாக்கப்பட உள்ளது.
E260 எலக்ட்ரிக் வாகனம் ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷனுக்கு சொந்தமான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் அடுத்தடுத்து மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. டாடா மோட்டார்ஸுக்குப் போட்டியாக எம்ஜி நிறுவனம் E260 எலக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் ஐந்து கதவுகள் கொண்ட எஸ்யூவி மற்றும் ஒரு சிறிய எம்பிவி, இரண்டும் ரூ. 15 லட்சத்துக்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
எம்ஜி மோட்டாரின் எலக்ட்ரிக் வாகனங்கள் சில சந்தையில் ஏற்றத் தாழ்வுகளை கண்டுள்ளது. ஆனால் அதன் இசட் எஸ் எலக்ட்ரிக் வாகனம் ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றது. வுலிங் கிளவுட் அடிப்படையிலான இந்தியாவுக்கான எம்ஜியின் புதிய எம்பிவி ஆனது தற்போது இந்தோனேசியாவில் விற்கப்படும் Wuling Cloud EV-ஐ அடிப்படையாகக் கொண்டது.
இது ஒரு வருட காலத்துக்குள் இந்திய சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாகனம் சுமார் 4.3 மீட்டர் நீளம் கொண்டது. 2,700 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. இது மாருதி எர்டிகாவின் 2,740 மிமீ மற்றும் ரெனால்ட் ட்ரைபரை விட (2,636 மிமீ) சற்று கூடுதலாக உள்ளது.
ஏற்கெனவே மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸின் Tigor X-Pres T EV மற்றும் BYD E6 MPV ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
எம்ஜியின் புதிய எம்பிவி மற்றும் எஸ்யூவி தனது போர்ட்ஃபோலியோவில் முன்னிலைக்கு வர விரும்புகிறது.
இதனிடையே எஸ்யூவி மாருதி ஜிம்னியின் வரிசையில் 5-கதவு ரக்கர்டான வாகனமாக இருக்கும். இது Baojun Yep Plus SUVயை அடிப்படையாகக் கொண்டது. எம்ஜி மோட்டார் கார்களுக்கு இந்த மாடல் போட்டியாக இருக்கும்.
எம்ஜி மோட்டார் இந்தியா சந்தை பங்கு: MG மோட்டார் இன்று அதன் போர்ட்ஃபோலியோவில் ஐந்து மாடல்களுடன் மிகவும் போட்டி நிறைந்த இந்திய சந்தையில் சுமார் 1 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இது மாதத்துக்கு 5,000 யூனிட்களை விற்பனை செய்கிறது.
எம்ஜி அதன் மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் வரும் ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்து வரும் என்று கணித்துள்ளது,
தயாரிப்பை அதிகரிக்க திட்டம்: வதோதராவின் புறநகர்ப் பகுதியில் கூடுதல் நிலத்தில் ஆலை அமைத்து ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி எமரிட்டஸ் ராஜீவ் சாபா, மே 2023 இல் தில்லியில் 2.0 மற்றும் 3.0 திட்டத்துடன் இந்தியாவுக்கான நிறுவனத்தின் நீண்ட காலத் திட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.
எம்ஜி ஜேஎஸ்டபிள்யூ பார்ட்னர்ஷிப்: 2.0 திட்டம் 2023-2025 காலகட்டத்துக்கானது என்றும், அதன் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 70,000 யூனிட்டுகளில் இருந்து 1.2 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் சாபா கூறியிருந்தார். அதன் இந்தியா 3.0 திட்டம் ஒரு புதிய முதலீட்டாளர் கொண்டு வரப்பட்டவுடன் உற்பத்தியை 1.2 லட்சம் யூனிட்களில் இருந்து 3 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கிறது.