போட்டி நிறுவனங்களை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த எம்ஜி! உண்மையா இதுலாம் சாதாரண விஷயம் இல்ல!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி (MG). கடந்த 2019ம் ஆண்டு எம்ஜி ஹெக்டர் (MG Hector) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தததன் மூலமாக, இந்த நிறுவனம் இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது.
தற்போதைய நிலையில் எம்ஜி ஹெக்டர், எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), எம்ஜி அஸ்டர் (MG Astor), எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) உள்ளிட்ட கார்களை எல்லாம் இந்த நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.
இதில், எம்ஜி இஸட்எஸ் இவி மற்றும் எம்ஜி கோமெட் இவி ஆகியவை, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) ஆகும். இந்த சூழலில் நேற்றுடன் (டிசம்பர் 31) முடிவடைந்த 2023ம் ஆண்டிற்கான எம்ஜி நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 56,902 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீத வளர்ச்சி ஆகும். மறுபக்கம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மட்டும் எடுத்து கொண்டாலும், எம்ஜி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்து அசத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் 4,400 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 13 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் காரணமாக வரும் காலங்களில் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் இன்னும் விஸ்வரூப வளர்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஜிதான் தற்போதைய நிலையில் இந்தியாவின் 2வது பெரிய எலெக்ட்ரிக் கார் விற்பனை நிறுவனம் ஆகும். இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதம், எலெக்ட்ரிக் கார்களில் இருந்து வருகிறது.
அதாவது எம்ஜி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் 100 கார்களில், 25 கார்கள் எலெக்ட்ரிக் கார்கள் ஆகும். வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.