எம்ஜிஆர் சம்பவம்.. 79 வருடத்துக்கு முன்பே இப்படியா? வில்லனாக மிரட்டல்!
1936 இல் சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்ஜி ராமச்சந்திரன் பத்து வருடங்களுக்கு மேல், சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
1947 இல் ராஜகுமாரி திரைப்படம் வெளிவந்து பெற்றி பெற்ற பின்பும் இந்த நிலை நீடித்தது. 1950 இல் வெளிவந்த மந்திரி குமாரி, அதையடுத்து வெளியான மர்மயோகி படங்களுக்குப் பிறகே நாயகன் அந்தஸ்து அவரை வந்தடைந்தது.
1945 இல் எம்ஜி ராமச்சந்திரன் சாலிவாஹன் படத்தில் நடித்தார். நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல் அவர் திரையுலகில் தத்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். ரஞ்சன் நாயகனாகவும், எம்ஜி ராமச்சந்திரன் வில்லனாகவும் சாலிவாகனன் படத்தில் தோன்றினர்.
சாலிவாகன் குறித்த நாட்டார் கதையில் சாலிவாகன் குயவர் குலத்தில் பிறந்தவன். புராணப் பூச்சுடன் வருகையில் கதை மாறும். ஆதிசேடன் பாம்பு ஒருமுறை மனித வடிவங்கொண்டு, சுமித்திரை என்ற பிராமணப் பெண்ணை கூடும். சுமித்திரை கர்ப்பமாவாள். இதனை அவள் ஆதிசேடனிடம் கூற, மனித வடிவில் இருக்கும் ஆதிசேடன், ‘பெண்ணே, நான் தெய்வலோகத்தைச் சேர்ந்த ஆதிசேடன். நமக்குப் பிறக்கும் குழந்தை மாபெரும் வீரனாக நாடாளுவான்’ என்று கூறி, தனது சுய வடிவத்தை சுமித்திராவுக்கு காட்டி, மறைந்து போவார்.
சுமித்திரை கர்ப்ப விஷயத்தை தனது தந்தை சுலோசனிடம் கூற, ‘பெண்ணே இது சாதாரணமாக நடக்கக் கூடியதல்ல, இது தெய்வச் செயல்’ என அகமகிழ்ந்து போவார். திருமணம் ஆகாமல் சுமித்திரை கர்ப்பமானது அரசர்வரை செல்லும். ஒழுக்கம் தவறியதாக சுமித்திராவும், அவளது தந்தையும் நாடு கடத்தப்பட்டு, ஒரு குயவர் குடியில் அடைக்கலம் ஆவார்கள். அங்கு அவளுக்கு குழந்தை பிறக்கும். அவனுக்கு சாலிவாகன் என்று பெயர் வைப்பார்கள். அந்த நாட்டை ஆண்டு வரும் விக்கிரமாதித்ய மகாராஜாவுடன் போர் புரிந்து, அவரை தோற்கடித்து நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றும் சாலிவாகன் விக்கிரமாதித்யனை கொன்று தனிப்பெரும் அரசனாக நாடாண்டான் என்பது கதை.
இந்த நாட்டார் மற்றும் புராண கதைகளை கலந்து சாலிவாஹன் படத்தை எடுத்தனர். இதில் குயவர் குடியில் பிறந்த சாலிவாகனாக ரஞ்சன் நடித்தார். அவர் இளவரசி (டி.ஆர்.ராஜகுமாரி) மீது காதல் கொள்வார். வில்லனான விக்கிரமாதித்யன் (எம்ஜி ராமச்சந்திரன்) வசந்தா மீது காதல் கொள்வார். படத்தில் ரஞ்சனுக்கும், எம்ஜி ராமச்சந்திரனுக்கும் வாள் சண்டை உண்டு. இந்த சண்டையை படமாக்கிய போது, ரஞ்சன் உண்மையாகவே ஆவேசமுடன் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக எம்ஜி ராமச்சந்திரன் புகார் கூறிய சம்பவம் நடந்தது.