Milkshake: எளியமுறையில் கேரட் வால்நட் மில்க்ஷேக் செய்வது எப்படி?
குளிர்காலத்தில் பருவ கால நோய்கள் வருவதைப் பார்க்கமுடிகிறது. இக்கால கட்டத்தில் இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கொழுப்புகளையும் ஆக்ஸிஜனேற்றிகளையும் தரும், வால்நட் பருப்புகள் முக்கியமான ஒன்றாகும்.
வால்நட் பருப்புகள் பல ஆரோக்கிய நன்மைகளையும், அருமையான ருசியையும் கொண்டிருக்கின்றன. இவை குளிர்காலத்திற்கு ஏற்றது.
ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த வால்நட் பருப்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது; மூளையின் செயல்பாட்டை சீராக்குகிறது. வால்நட் பருப்புகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த பிறப்பிடமாகும். அதைத் தனியாக உண்டாலும், சாலட்கள் கலந்து உண்டாலும் வால்நட்கள், உடலுக்கு ஆரோக்கியமான உணவாகத் திகழ்கிறது.
குளிர்காலத்திற்கு சுவையான வால்நட் ரெசிபிகள் குறித்து செஃப் மேக்னா கம்தார், மூன்று ருசியான சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவை சத்தான சுவையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருகின்றன.
தேவையான பொருட்கள்:
- 6-7 வால்நட் பருப்புகள்;
- 6 விதை இல்லாத பேரீச்சை;
- கேரட்;
- ஏலக்காய் தூள்;
- பால்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில், 6-7 வால்நட்ஸ்களை போட்டுக்கொள்ளவும். இந்த பிராசஸ் தொடங்குவதற்கு முன்பு, அரைமணிநேரம் 6 விதை நீக்கிய பேரீச்சம்பழங்களை, நீரில் ஊறவைத்துக்கொள்ளவும். பின், 6 விதையில்லா பேரீச்சம்பழங்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ளவும். ஊறவைத்த நீரையும் சிறிது மிக்ஸி ஜாரில் கலந்துகொள்ளவும். நறுக்கிய நடுத்தர அளவு கேரட்டினை அதில் சேர்க்கவும்.ஏலக்காய் தூள் சேர்க்கவும். மாற்றாக நீங்கள் இலவங்கப்பட்டை அல்லது உலர்ந்த இஞ்சி தூளைக் கூட அதில் பயன்படுத்தலாம். அவை அனைத்தையும் அரைத்தால் கிடைக்கும் கலவையில் காய்ச்சிய பாலைச் சேர்த்து இன்னொரு முறை மிக்ஸியில் அரைக்கவும். இப்போது, நீங்கள் ஆசைப்பட்ட சுவையான சர்க்கரை இல்லாத எனர்ஜி பூஸ்டர் வால்நட் மில்க் ஷேக் தயார்.
அவற்றைப் பரிமாறும்போது இன்னும் சில துருவிய கேரட் மற்றும் சுவையான வால்நட்ஸைச் சேர்க்கலாம். இதை எப்போது வேண்டும் என்றாலும் செய்து குடிக்கலாம். தனிப்பட்ட முறையில் இதை காலை அல்லது மாலை உணவாக எடுத்துக்கொண்டால் நல்லது.