விழுப்புரத்தில் மினி டைடல் பூங்கா : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பிப்ரவரி 17) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 63,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் 24.06.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, இத்திட்டப்பணிகள் குறுகிய காலத்திலேயே நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் மாவட்டத்தின் சமூக பொருளாதாரமும் மேம்படும்.
முத்தமிழறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைக்கப்பட்ட டைடல் பூங்கா, தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட அடித்தளமாக அமைந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக அமைவதை உறுதி செய்திட, முதற்கட்டமாக விழுப்புரம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத்தில், 31 கோடி ரூபாய் செலவில், 63,000 சதுரஅடி பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின்தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டட மேலாண்மை, மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, 24×7 பாதுகாப்பு, உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.