உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே குண்டாயிருப்பில் விக்னேஷ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் அவேராஜ், முத்து, ரமேஷ், கருப்பசாமி, குருசாமி, முனியசாமி, சாந்தா, முருகஜோதி, ஜெயா, அம்பிகா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், ரெங்கம்மாள், சிவக்குமார், முத்துக்குமார், அன்னலட்சுமி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான நிவாரண உதவித் தொகையாக தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதோடு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடியும் அறிவித்தார்.
அதையடுத்து, உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த நிவாரண நிதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, எம்எல்ஏக்கள் சீனிவாசன் (விருதுநகர்), ரகுராமன் (சாத்தூர்) ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர், உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சமும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், ஈம சடங்கு உதவித்தொகையாக தலா ரூ.5 ஆயிரமும் என 10 குடும்பத்தினருக்கு தலா ரூ..5.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ.50.50 லட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகையை வழங்கினர்.
அப்போது, நிவாரணத் தொகை பெற்ற குடும்பத்தினர் தங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுமாறும், அங்கன்வாடி, சமையல் பணி வழங்கி உதவுமாறும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர்கள் அப்போது தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், “வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ. 3லட்சம், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தற்போது நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா ரூ.2.05 லட்சமும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிரந்தர பணி வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று அங்கன்வாடி, சத்துணவுத் திட்டங்களில் சமையல் பணிகளில் கண்டிப்பாக முன்னுரிமை வழங்கப்படும்” என்று கூறினார்.