‘புதினா வேர்க்கடலை சட்னி’… இப்படி செய்து பாருங்க சுவை அப்படி இருக்கும்.!

புதினா இலைகள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி நம்முடைய ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகின்றன. புதினா எல்லா பருவங்களிலும் கிடைக்கும் அற்புத பொருள் ஆகும்.
மருத்துவ குணங்கள் நிறைந்த புதினா இலையானது ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது உடற்சூட்டைத் தணிக்கவும் உதவுகிறது. புதினா இலைகள் வயிற்று பிரச்சனைகளை சுகப்படுத்தும், வீக்கம், வாயு மற்றும் மாதவிடாய் வலிக்கு கூட நிவாரணம் அளிக்கும்.
காலையில் இட்லி அல்லது தோசை செய்கிறீர்கள் என்றால் இவ்வளவு மருத்துவ பண்புகள் கொண்ட புதினா இலைகளை வைத்து சட்னி செய்து தந்தால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே வேளையில் சுவையாகவும் இருப்பதால் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக வேர்க்கடலை சேர்த்து தயாரித்து பாருங்கள் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்.
புதினா வேர்க்கடலை சட்னியை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
புதினா – 1 கப்
கொத்தமல்லி இலை – 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
வெங்காயம் – 1
புளி – தேவையான அளவு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 3
சீரகம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள் :
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு வேர்க்கடலையைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையை ஒரு தட்டில் பரப்பி ஆறவைத்து கொள்ளவும்.
அடுத்து அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய சிறிய அளவிலான வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
அதன் பின்பு அதில் புதினா, கொத்தமல்லி இலை, புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி ஆறவைத்து கொள்ளுங்கள்.
அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசிய அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் போட்டு கலந்தால் சுவையான புதினா வேர்க்கடலை சட்னி தயார்.