சாகுபடி பரப்பு அதிகரிப்பால் புதினா விலை சரிவு: ஓசூர் விவசாயிகள் வேதனை

ஓசூர்: தமிழகம் மற்றும் கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் புதினா சாகுபடி பரப்பு அதிகரிப்பு காரணமாக வழக்கமாக கர்நாடக, ஆந்திர மாநில சந்தைக்குச் செல்லும் ஓசூர் புதினாவின் தேவை குறைந்து விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, உத்தனப் பள்ளி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் புதினா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் புதினா ஓசூர் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திரா,கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதினா ஒரு கட்டு ரூ.30 முதல் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மகசூல் அதிகரிப்பால் ஒரு கட்டு ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் தக்காளி, புதினா, கீரை வகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறோம். குறிப்பாக புதினா சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சூளகிரி சந்தையில் 40 கட்டுக் கொண்ட ஒரு மூட்டை புதினா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. இந்நிலையில், தமிழகம், ஆந்திர, கர்நாடக ஆகிய மாநிலங்களில் பெய்த மழை காரணமாக அங்கு புதினா சாகுபடி பரப்பு அதிகரித்தது. இதனால், ஓசூர் பகுதியிலிருந்து இப்பகுதி சந்தைகளுக்கு ஓசூர் பகுதி புதினாவின் தேவை குறைந்துள்ளது.
அதே நேரம் ஓசூர் பகுதியில் மகசூல் அதிகரிப்பால், உள்ளூர் தேவைக்கு அதிகமாகச் சந்தைக்கு புதினா வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஓசூர் பகுதியில் ஒரு கட்டு புதினா ரூ.6-க்கும், 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை ரூ.200 முதல் ரூ.300-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல விவசாயிகள் வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பலர் புதினாவை அறுவடை செய்யாமல் வயலில் அப்படியே விட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.