கனடாவில் காணமல்போன பாகிஸ்தானிய விமான பணிப்பெண்., நன்றி குறிப்பை எழுதி வைத்துவிட்டு மாயம்
கனடாவில் பாகிஸ்தானிய விமான பணிப்பெண் ஒருவர் மாயமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சமீபத்தில் கனடாவில் விமானம் தரையிறங்கியதும் விமானப் பணிப்பெண் ஒருவர் அறையில் இருந்து காணாமல் போனார்.
அதுவும், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு (PIA) நன்றி குறிப்பை எழுதி வைத்துவிட்டு அவர் மாயமானார்.
PIA-இல் விமானப் பணிப்பெண்ணாக பணிபுரியும் மரியம் ரசா (Maryam Raza), திங்கள்கிழமை இஸ்லாமாபாத்தில் இருந்து Toronto செல்லும் விமானத்தில் பணிப்பெண்ணாக தனது கடமைகளைச் செய்தார்.
ஆனால் அந்த விமானம் பாகிஸ்தானுக்கு திரும்பும் பயணத்தின் போது அவர் பணியில் சேரவில்லை.
இதனால் பாகிஸ்தான் விமான அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மரியம் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனர்.
அந்த அறையில் PIA சீருடையுடன் (Thank You PIA) என்ற நன்றி குறிப்பும் காணப்பட்டது.
அதைப் பார்த்த பிறகுதான் மரியம் வேண்டுமென்றே அங்கிருந்து தப்பித்து போயுள்ளார் என்பதை PIA அதிகாரிகள் உணர்ந்தனர்.
கனடாவில் பாகிஸ்தான் விமானப் பணிப்பெண்கள் காணாமல் போவது இது முதல் முறையல்ல. இந்த போக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது.
2022-இல் நான்கு விமானக் குழுவினர் மற்றும் 2023-இல் 7 விமானக் குழுவினர் கனடாவில் காணாமல் போயினர்.
PIA விமானப் பணிப்பெண் ஃபைசா முக்தாரும் (Faiza Mukhtar) இந்த ஆண்டு ஜனவரி மாதம் கனடாவில் காணாமல் போனார். அந்த வரிசையில் சமீபத்தில் மரியம் ரசா காணாமல் போனார்.
காணாமல் போன PIA விமானப் பணிப்பெண்கள் கனடாவில் தஞ்சம் புகுந்து அங்கு குடியேறி வருவதாக கூறப்படுகிறது.