பெரிய சவாலை கொடுத்த படம் ‘மிஷன்’ – அருண் விஜய்

பொங்கல் ரேஸில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘மிஷன் சாப்டர் 1’ படமும் களமிறங்குகிறது. வரும் 12-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தை விஜய் இயக்கி இருக்கிறார்.

எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், பாரத் போபண்ணா உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் 60 சதவிகித கைத, லண்டனில் நடக்கிறது. படம் பற்றி அருண் விஜய்யிடம் பேசினோம்.

உங்களோட இந்த ‘மிஷன்’ எப்படி உருவாச்சு?

இயக்குநர் விஜய் படத்துல நடிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. அவரோட மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் மாதிரி ஒரு படத்துல நடிக்கணுங்கற எண்ணம் இருந்தது. ஒரு முறை சந்திக்கும்போது ஒரு அவுட் லைன் சொன்னார். அதுல ஆக்‌ஷன் அதிகமா இருந்தது. ‘உங்க நடிப்புல ஆக்‌ஷன் இல்லாம பண்ண முடியாது, அதோட எமோஷனல் விஷயமும் கதையில இருக்கு’ன்னு சொன்னார். முழு கதையையும் கேட்டதும் எனக்கு சவாலான விஷயங்கள் அதுல இருந்தது தெரிய வந்தது. ஒரு நடிகனா எனக்கு அது பிடிச்சிருந்தது. உடனே ஆரம்பிச்சுட்டோம். அப்படித்தான் இந்த மிஷன் தொடங்குச்சு.

நீங்க நடிச்ச படங்கள்லயே அதிக பட்ஜெட்ல உருவான படம் இதுன்னு சொல்றாங்களே?

உண்மைதான். நிறைய செட் போட்டோம். நல்ல தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கறதுக்காக நிறைய செலவு பண்ணியிருக்காங்க.படத்துல என் கேரக்டர் சர்ப்பிரைஸா இருக்கும். அந்த சர்ப்பிரைஸ் எங்க வெளிப்படுதுங்கற இடம் மிரட்டலா இருக்கும்.லண்டன்ல ஷுட் பண்ணும்போது பிராக்டிக்கலா நிறைய கஷ்டம். விஜய்க்கு பெரிய படங்கள் இயக்கிய அனுபவம் இருக்கிறதால, அதை ஈசியா சமாளிச்சார்.

லண்டன் சிறைச்சாலை போல, இங்க செட் போட்டீங்களாமே?

லண்டன்ல எடுத்த காட்சிகளோட கன்டினியூட்டிக்காக சுமார் 4 ஏக்கர்ல செட் போட்டோம். பெரிய டீட்டெய்லிங்கான செட். அதுலதான் கதை நகர்ற விஷயம் இருக்கறதால, அவ்வளவு பெரிய செட், தேவையானதா இருந்தது. தினமும் ஒரு நானூறு, ஐநூறு பேர் செட்ல இருந்துட்டே இருப்பாங்க. லண்டன் சிறைங்கறதால, ஆங்கிலேயர்கள் மாதிரியான ஆட்களை காண்பிக்கணும். அதுக்கான ஆட்களை வரவழைச்சு ஷூட் பண்ணினோம். ரூ.4.5 கோடி செலவுல போட்ட செட், இரண்டு தடவை மழையில வீணா போச்சு. அதுபற்றி கவலைப்படாம திரும்பவும் செட் போட்டு ஷூட் பண்ணினோம்.

டிரெய்லர் பார்த்தா ஆக்‌ஷன் அதிகம் தெரியுதே?

இந்தக் கதை அப்படித்தான். சில்வா மாஸ்டர்தான் ஆக்‌ஷன் காட்சிகளை அமைச்சிருக்கார். ஆக்‌ஷன்ல நிறைய விஷயங்களை புதுசா பண்ணியிருக்கோம். நிறைய ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கேன். இதனால சில முறை எனக்கு காயம் ஏற்பட்டுச்சு.

இயக்குநர் விஜய்யோட பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது..?

நான் ஹரி சார் படத்துல நடிச்சிருக்கேன். அவர் ரொம்ப ஸ்பீடா ஒர்க் பண்ணுவார். இவர் இன்னும் வேகமாக, இந்த குவாலிட்டியில பண்ணுவார்னு எதிர்பார்க்கல. கதையில வர்ற சில காட்சிகளை இவர் எப்படி எடுக்கப் போறார்ங்கற பயம் முதல்ல இருந்தது. ஏன்னா, படத்துல பெரிய கூட்டம் இருக்கு.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *