இந்தியாவில் மீண்டும் கால் தடம் பதிக்கின்றது மிட்சுபிஷி! பஜேரோ, லேன்சர் எல்லாம் மறுபடியும் இந்தியாவுக்கு வரபோது
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜாம்பவான் கார் உற்பத்தி நிறுவனங்களில் மிட்சுபிஷி (Mitsubishi)-யும் ஒன்றாகும். ஒரு காலத்தில் வாகன உற்பத்தில் இந்தியாவில் சக்கைப் போடு போட்ட நிறுவனங்களிலும் இது ஒன்றாக இருக்கின்றது. இதற்கு சான்றாக இப்போதும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றன.
கடந்த காலத்தில் இந்தியாவில் வெகுஜன மக்களை கவர தவறியதனாலும், இது தவிர இன்னும் வேறு சில காரணங்களாலும் இந்த நிறுவனத்தால் இந்தியாவில் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. இதன் விளைவாகவே இந்தியாவை விட்டே வெளியேறியது, மிட்சுபிஷி. இந்த நிலையிலேயே இந்த நிறுவனம் மீண்டும் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமாங்க, மிட்சுபிஷி மீண்டும் அதன் வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த சம்மருக்குள் நிறுவனம் அதன் மறு வருகையை பதிவு செய்ய இருப்பதாகவும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முறை தனியாளாக இல்லாமல் அது வேறொரு நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது.
டிவிஎஸ் மொபிலிட்டி (TVS Mobility) உடன் இணைந்தே அது வர்த்தக பணிகளை மேற்கொள்ள உள்ளது. நிறுவனம் 33 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 66 அமெரிக்க டாலர்கள் வரை இம்முறை முதலீடு செய்ய இருக்கின்றது. இந்த முதலீட்டு திட்டம் பற்றிய தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரியான நிக்கீ உறுதிப்படுத்தி இருக்கின்றார்.
இதன் அடிப்படையிலேயே மிட்சுபிஷி மீண்டும் அதன் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. மேலும், மிட்சுபிஷியின் மறு வருகையால் மீண்டும் இந்தியாவில் பஜேரோ மற்றும் லேன்சர் உள்ளிட்ட கார் மாடல்கள் இந்தியாவில் மீண்டும் அவற்றின் தரிசனைத்தை வழங்கும் சூழல் உருவாகி இருக்கின்றது.
தற்போது முதலீட்டிற்கான அனுமதிக்காகவே நிறுவனம் காத்திருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கான ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் நிறுவனம் பணியாளர்களை நியமிக்கத் தொடங்கும். இத்துடன் டீலர்ஷிப்புகளை (விற்பனையாளர்களை) அமைக்கும் பணியில் மிட்சுபிஷி களமிறங்க உள்ளது. நாட்டில் மாபெரும் விற்பனை வலையமைப்பைக் கொண்டிருக்கும் நிறுவனமாக டிவிஎஸ் மொபிலிட்டி இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி சுமார் 150 விற்பனையகங்களை அதுக் கொண்டு இருக்கின்றது. இந்த அவுட்லெட்டுகள் வாயிலாகவே மிட்சுபிஷி அதன் வர்த்தகத்தை மேற்கொள்ள இருக்கின்றது. தன்னுடைய தயாரிப்பை அனைவர் மத்தியிலும் கொண்டு சேர்க்கும் வேண்டும் என்பதற்காக அது இந்தியாவிற்கான பிரத்யேக தளத்தையும் கட்டமைக்க இருக்கின்றது.
மிட்சுபிஷி கார் பற்றிய முக்கிய விபரங்களை அறிய மற்றும் தங்களின் விருப்பத்தை நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவும் இந்த தளத்தை வாடிக்கையாளர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும். மிட்சுபிஷி இந்த முறை அதிகளவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு மிக அதிகம்.
இந்த பிரிவின் தலைவனாக இப்போதைய நிலவரப்படி டாடா மோட்டார்ஸே இருக்கின்றது. ஆகையால், இந்த பிரிவை கட்டாயம் மிட்சுபிஷி அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த நிறுவனம் முதலில் என்ன கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும்? அதன் விலை எவ்வளவாக இருக்கும்? என்பது போன்ற எந்த விபரங்களும் வெளியாகவில்லை.
விரைவில் மிட்சுபிஷியின் பிளான்கள் அனைத்தும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிட்சுபிஷியன் மறு வருகை ஸ்கோடா (Skoda), ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) போன்ற பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு தலைவலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, மிட்சுபிஷி பிளானில் எலெக்ட்ரிக் கார்களும் இருப்பதால் டாடா மோட்டார்ஸ்க்கும் இதன் வருகை தலைவலியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.