புதினா சட்னியுடன் இந்த ஒரு பொருளை சேத்துக்கிட்டா.. சட்னி இன்னும் செம ருசியா இருக்கும்…
காலையில் உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? இதற்கு அட்டகாசமான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் புதினா உள்ளதா? அப்படியானால் அந்த புதினாவைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், சற்று வித்தியாசமாக வேர்க்கடலை சேர்த்து செய்யுங்கள். இதனால் சட்னி இன்னும் அற்புதமான சுவையில் இருக்கும். முக்கியமாக இந்த சட்னி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு புதினா வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புதினா வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
* கொத்தமல்லி – 1/4 கப்
* கொத்தமல்லி – 1/4 கப்
* சிறிய அளவிலான வெங்காயம் – 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 3
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* புளி – 1 சிறிய துண்டு
* பூண்டு – 2 பல்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையைப் போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை ஒரு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா, கொத்தமல்லி, புளி ஆகியவற்றை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில், வறுத்த வேர்க்கடலை மற்றும் வதக்கிய புதினா கலவையை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொண்டால், சுவையான புதினா வேர்க்கடலை சட்னி தயார்.
* வேண்டுமானால் சட்னியை அரைத்த பின், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கொள்ளலாம்.