MK Alagiri: மு.க.அழகிரி எதிரான வழக்கு.. 12ம் தேதி வெளியாகிறது தீர்ப்பு..!
2011 சட்டமன்ற தேர்தலில் தாசில்தாரை தாக்கியதாக மு.க.அழகிரிக்கு எதிரான பதிவு செய்யப்பட்ட வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் தாசில்தாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கில் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.